என் மலர்
கதம்பம்

ஒரு ஆசிரியரின் கலை தாகம்
- பள்ளி ஆசிரியராக ராமையா இருந்த போதே பல நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.
- ஏ.பி. நாகராஜன் பள்ளிக்கூடத்திற்கேப் போனதில்லை.
தமிழ் திரைப்படத்துறையில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸ் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக இருந்தவர்.
இவரது இயற்பெயர் ராமையா. இவர் தந்தை பெயர் நாராயணசாமி நாயனார். தஞ்சை கரந்தை தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து புலவர் பட்டம் பெற்றார்.
பள்ளி ஆசிரியராக ராமையா இருந்த போதே பல நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதினார். பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று எண்ணிய இவர், வேலையை விட்டுவிட்டு சேலத்தில் இருந்த ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்து பல நாடகங்கள் எழுதினார். அப்போது இவர் தனக்கு வைத்துக் கொண்ட பெயர்தான் ராமையாதாஸ்.
அன்றைய காலத்தில் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் பெண்கள் என்றால் 'தேவி'யென்றும் ஆண்கள் என்றால் 'தாஸ்' என்றும் தங்கள் பெயருக்குப் பின்னால் வைத்துக் கொள்வார்கள்.
அதன் பிறகு, தானே ஒரு நாடகக் கம்பெனியைத் தொடங்கி முதலில் சிறுவர்களை வைத்தும் அதன் பின்னர் இளைஞர்களை வைத்தும் நாடகங்கள் நடத்தினார். அதில் ஒரு நாடகம், "மச்சரேகை'. இந்த நாடகத்தின்போது தான், பின்னாளில் பல படங்களை எழுதித் தயாரித்து இயக்கிய ஏ.பி. நாகராஜன் தஞ்சை ராமையாதாசிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.
ஏ.பி. நாகராஜன் பள்ளிக்கூடத்திற்கேப் போனதில்லை. எல்லாம் அனுபவப் படிப்புத்தான். இவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து இவரைச் சிறந்த முறையில் உருவாக்கிய நாடக ஆசிரியர் ராமையாதாஸ் தான்.
-பாண்டியன் சுந்தரம்






