என் மலர்
கதம்பம்

திண்ணை!
- பழைய காலத்தில் வீட்டின் இருபுறமும் திண்ணை வைத்து கட்டுவார்கள்.
- திண்ணைகள் நமது பாரம்பரியம்.
உங்கள் வீட்டில் திண்ணை இருக்கிறதா? அந்த திண்ணையில் உட்கார்ந்து அந்த மகோன்னதமான வசந்தத்தை அனுபவித்து இருக்கிறீர்களா?
ஓலைக்குடிசையின் ஒட்டுத்திண்ணை தொடங்கி, ஓங்கி உயர்ந்த மச்சுவீட்டின் வரவேற்பு திண்ணை வரை அன்றைய மக்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நீக்கமற நிறைந்திருந்தன திண்ணைகள்.
இன்று திண்ணைகள் இருக்கும் இடத்தில் இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும், வாடகைக்கு கடைகளும் இருக்கின்றன.
இப்போது எந்த வீட்டிற்கும் திண்ணைகள் இல்லை. மக்கள் மனதில் பரந்த எண்ணமும் ஈரமும் இல்லை.
பழைய காலத்தில் வீட்டின் இருபுறமும் திண்ணை வைத்து கட்டுவார்கள்.
வழிபோக்கர்கள் தங்கவும், வீட்டு பெரியவர்கள் மாலைநேரத்தில் காற்று வாங்கவும் வசதியாக இருக்கும்.
கூட்டு குடும்பம் இல்லாமல் எப்படி நமது பண்பாடு சீர்கெட்டு விட்டதோ, அப்படியே திண்ணைகள் இல்லாமல் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் அமைதி இல்லாமல் போய்விட்டது.
ஒற்றை திண்ணையை விட இரட்டை திண்ணையே விஷேசமானது. வீட்டுக்கு வருபவர்களை உட்கார வைத்து பேச வசதியாக இருக்கும்.
மாலையில் காற்று வாங்கவும், அருகில் வசிப்பவர்கள் கடந்து செல்லும் போது குசலம் விசாரிக்கவும், வீட்டுப் பெரியவர்கள் மாலை திண்ணையில் அமர்ந்து கதை பேசவும் திண்ணைகளின் பயன்பாடு அளப்பரியது.
எல்லா நேரமும் எல்லாத் திண்ணைகளும் ஏதோ ஒரு சேதியை சொல்லி கொண்டுதான் இருந்தன.
அதில் அமர்ந்துதான் பாட்டிகள், பேரன் பேத்திகளுக்கு கதைகள் சொன்னார்கள். இளையவர்கள் பல்லாங்குழி விளையாடினார்கள்.
பெரியவர்கள் பரமபதம் ஆடினார்கள், அப்பாக்கள் அரசியல் பேசினார்கள்.
அம்மாக்கள் ஊர்க்கதை பேசினார்கள்.
புழக்கடை திண்ணையில் அமர்ந்து புது மணத்தம்பதியர் நிலாவை ரசித்தார்கள்.
எதிர் திண்ணைகளில் காதலர்கள் சமிக்ஞையில் காதலை வளர்த்தார்கள்.
திண்ணைகள் பள்ளிகூடமாகவும், அரசியல் மேடைகளாகவும், நடன அரங்கமாகவும், கலைக் கூடமாகவும், விளையாட்டு அரங்கமாகவும் தேவைக்கேற்ப மாறிக் கொள்ளும் இயல்புடையதாக இருந்தது.
ஆனால்.. இன்று அவை கிராமங்கிளல் கூட மறைந்து வருகின்றன.
திண்ணைகள் வெறும் கல் சிமெண்ட் மணலால் ஆன கலவைகள் மட்டும் அல்ல.
திண்ணைகள் நமது பாரம்பரியம்.






