search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிரடியாக ஆடிய ஜேசன் ராய்
    X
    அதிரடியாக ஆடிய ஜேசன் ராய்

    ராய் அதிரடி ஆட்டம் - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து

    உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் ஜேசன் ராய் அதிரடி ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து.
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரோன் பிஞ்ச் டக் அவுட்டனார். டேவிட் வார்னர் 9 ரன்னிலும், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 4 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ஸ்மித், அலெக்ஸ் கேரி ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது.

    அலெக்ஸ் கேரி 46 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஸ் ரன் ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ ஆனார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஸ்மித் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். 

    ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். ஸ்டார்க் 36 பந்தில் 29 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா 49 ஓவரில் 223 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இங்கிலாந்து அணி சார்பில் ரஷித், கிறிஸ் வோக்ஸ் தலா மூன்று விக்கெட்டுக்களும், ஆர்சர் இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.



    இதையடுத்து, 224 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    ஜேசன் ராய் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். அவருக்கு பேர்ஸ்டோவ் ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

    பேர்ஸ்டோவ் 34 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய ஜேசன் ராய் அரை சதமடித்தார். அவர் 85 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜோ ரூட், கேப்டன் மார்கன் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரூட் 49 ரன்னும், மார்கன் 45 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்த வெற்றியை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் ஞாயிறன்று நடக்கும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து.
    Next Story
    ×