என் மலர்
உலகம்

போர் பதற்றம் தொடர்பாக அதிபர் டிரம்ப் மற்றும் புதின் தொலைபேசியில் பேச்சு
- இஸ்ரேல் , ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது
- அதேவேளை, அணு ஆயுதத்தை உருவாக்க ஈரான் முயற்சித்து வருகிறது.
மாஸ்கோ:
இஸ்ரேல் , ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. அதேவேளை, அணு ஆயுதத்தை உருவாக்க ஈரான் முயற்சித்து வருகிறது. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கினால் தங்கள் நாட்டிற்கு பேராபத்து என்று இஸ்ரேல் கருதுகிறது. இதனால், ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு நடவடிக்கையை தடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.
ஈரான் அணு ஆயுதத்தை தயாரித்துவிட்டால் தங்கள் நாட்டின் இருப்புக்கு ஆபத்து என கருதிவரும் இஸ்ரேல் நேற்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை நேற்று தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.
சுமார் 50 நிமிடங்கள் நீடித்த அவர்களின் உரையாடலில் மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல் தாக்குதலால் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்ற நிலை குறித்து விவாதித்தனர்.
மேலும், உக்ரைனுடனான பேச்சுவார்த்தை குறித்தும் அவர்கள் உரையாடினர்.