ஈரான் உச்ச தலைவராக அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா நியமனம்?

ஈரானில் இதுவரை 700க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.56 வயதான மொஜ்தபா ஈரானின் ராணுவ ஆதரவை பெற்றுள்ளார்.
ஈரான் உச்ச தலைவராக அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா நியமனம்?
Published on

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் ஒன்றிணைந்து கடந்த சனிக்கிழமை முதல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

சனிக்கிழமை தெஹ்ரானில் நடந்த தாக்குதலில் ஈரான் உச்சந்தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அவருடன் அவரது மகள், மருமகன், மருமகள், பேரன் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 700க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில் பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க படைத் தளங்கள் மீதும் ஈரான் புரட்சிகர ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையே ஈரானின் இடைக்கால உச்சத் தலைவராக அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டார்.  

இந்நிலையில் அயதுல்லா அலி காமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானிய அரசியலமைப்பின் படி, உச்ச தலைவரை நிபுணர்கள் சபையால் தேர்ந்தெடுக்க வேண்டும். 

இருப்பினும், 56 வயதான மொஜ்தபா ஈரானின் சக்திவாய்ந்த இராணுவப் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர ராணுவத்தின் கடுமையான அழுத்தத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

'ஈரான் இன்டர்நேஷனல்' என்ற செய்தி நிறுவனத்தின் கட்டுரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

முடியாட்சிக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஈரான் இஸ்லாமியக் குடியரசில் தந்தையிடமிருந்து மகனுக்கு அதிகாரம் மாற்றப்படுவது இதுவே முதல் முறை.

மொஜ்தபாவின் இராணுவத்துடனான நெருங்கிய உறவுகளே அவரது நியமனத்திற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.

கடந்த 27 ஆண்டுகளாக திரைக்குப் பின்னால் அரசியலில் முக்கிய பங்கு வகித்து வரும் மொஜ்தபா, இப்போது நேரடியாக அதிகாரப் பொறுப்பை ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா - இஸ்ரேல் உடன் சண்டை தொடர்ந்து வரும் சூழலில் இந்த அவரது தலைமையில் அடுத்து என்ன முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com