என் மலர்
உலகம்

சர்வதேச சட்டத்தை மீறி அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல்.. அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
- ஃபோர்டோ, இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் ஆகிய அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தியதாக அறிவித்திருந்தார்.
- மாபெரும் ஈரானிய தேசத்திற்கு உறுதியளிக்கிறோம்
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாக ஈரான் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராணுவம் ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகத் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இத்தாக்குதல் இன்று அதிகாலையில் நடந்தது. இந்நிலையில் இந்த தாக்குதலை ஈரான் அணுசக்தி அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது. இருப்பினும் சேதத்தின் அளவு குறித்து ஈரான் தெளிவுபடுத்தவில்லை.
இந்நிலையில் ஈரானிய அணுசக்தி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதிரிகளின் தீய சதிகளுக்கு மத்தியிலும், ஆயிரக்கணக்கான புரட்சிகர விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் முயற்சிகளுடன், அணுசக்தி தியாகிகளின் இரத்தத்தின் விளைவாக கிடைத்த இந்த தேசியத் தொழிலின் (அணுசக்தி) வளர்ச்சியை நிறுத்த அனுமதிக்காது என்று மாபெரும் ஈரானிய தேசத்திற்கு உறுதியளிக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தாக்குதல்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி எச்சரித்துள்ளார்.
மேலும் "ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா, ஈரானின் அமைதியான அணுசக்தி நிலையங்களைத் தாக்குவதன் மூலம் ஐ.நா. சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் NPT ஆகியவற்றை கடுமையாக மீறியுள்ளது" என்று கூறிய அவர் ஐநா சாசனத்தின் படி தன்னை தர்க்கத்துக் கொள்ளும் உரிமை ஈரானுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களை தொடர்ந்து, கதிர் வீச்சுக்கான எந்த அறிகுறியும் இல்லை என்று ஈரானின் அணுசக்தி அமைப்பு உறுதிப்படுத்தியதாக ஈரானிய அரசு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் பொது மக்களுக்கு பாதிப்பு இருக்காது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று, ஈரானுக்கு அதன் அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தைக்கு திரும்ப அதிகபட்சம் இரண்டு வாரங்கள் கால அவகாசம் அளித்துள்ளதாக டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
கடந்த ஜூன் 13 அன்று, இஸ்ரேல் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. இதில் பல உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. மேலும் சில ஈரானிய ராணுவத் தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேலின் பல்வேறு இடங்களில் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.






