என் மலர்
உலகம்

ஒருவேளை இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மறுத்தால்.. மாஸ்கோ சொன்னது என்ன?
- இந்தியாவுக்கு வழங்கும் எண்ணெய்க்கு கூடுதலாக 5 சதவீத தள்ளுபடி வழங்குவதாக தெரிவித்துள்ளது.
- அவர்கள் தங்கள் சொந்த நலனைப் பற்றி சிந்திக்கும் நவகாலனித்துவ சக்திகளைப் போல நடந்து கொள்கிறார்கள்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதாக கூறி இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார். இந்த வரி வரும் ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் ரஷியா, இந்தியாவுக்கு வழங்கும் எண்ணெய்க்கு கூடுதலாக 5 சதவீத தள்ளுபடி வழங்குவதாக தெரிவித்துள்ளது.
ரஷிய உயர்மட்ட அதிகாரி ரோமன் பாபுஷ்கின் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதை உறுதிப்படுத்தினார்.
அப்போது, இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெயை வாங்குவதை நிறுத்தினால் என்ன செய்வீர்கள் என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பாபுஷ்கின், "இந்தியா ரஷிய எண்ணெயை மறுத்தால், அது பொதுவாக மேற்கு நாடுகளுடன் சமமான ஒத்துழைப்புக்கு வழிவகுக்காது.
ஏனெனில் அது மேற்கத்திய இயல்பில் இல்லை. இது சமீபத்திய ஆண்டுகளில் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தங்கள் சொந்த நலனைப் பற்றி சிந்திக்கும் நவகாலனித்துவ சக்திகளைப் போல நடந்து கொள்கிறார்கள். இந்த அழுத்தம் நியாயமற்றது மற்றும் ஒருதலைப்பட்சமானது.
மேற்கு நாடுகள் உங்களை விமர்சித்தால், நீங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்கிறீர்கள் என்று அர்த்தம். இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
இந்தியாவுக்கான சவாலான சூழ்நிலைகள் பற்றி எங்களுக்குத் தெரியும். என்ன நடந்தாலும், சவால்களின் போது கூட, எந்தவொரு பிரச்சினையையும் நீக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று கூறினார்.






