என் மலர்tooltip icon

    கனடா

    • கனடாவை சேர்ந்த ஒரு மாணவி லாட்டரி மூலம் ஒரே நாளில் மிகப்பெரிய கோடீஸ்வரியாக மாறி உள்ளார்.
    • பரிசு பெற்ற வேகத்தில் ஜூலியட் உடனடியாக ரூ.2 கோடி மதிப்பிலான சொகுசு காரை வாங்கினார்.

    டொரோண்டோ:

    கனடாவை சேர்ந்த ஒரு மாணவி லாட்டரி மூலம் ஒரே நாளில் மிகப்பெரிய கோடீஸ்வரியாக மாறி உள்ளார். அவரது பெயர் ஜூலியட். 18 வயது மாணவியான இவர் தனது பிறந்தநாளையொட்டி அங்குள்ள வணிக வளாகத்திற்கு பொருட்கள் வாங்க தனது தாத்தாவுடன் சென்றார்.

    அப்போது அவர் தாத்தா அறிவுறுத்தலின்படி லாட்டரி சீட்டுகளை வாங்கினார். பின்னர் அவர் அந்த சீட்டுகளை வீட்டில் வைத்து விட்டு மறந்தே போனார். இந்த நிலையில் பக்கத்து வீட்டுக்காரருக்கு லாட்டரியில் பரிசு விழுந்த விவரம் அவருக்கு தெரிய வந்தது. அப்போது தான் அவருக்கு தானும் அந்த லாட்டரியை வாங்கியது நினைவுக்கு வந்தது.

    உடனே அவர் தான் வாங்கிய சீட்டுக்கு பரிசு விழுந்து இருக்கிறதா? என பார்த்தார். அவரது அதிர்ஷ்டம் லாட்டரியில் இந்திய மதிப்பில் ரூ.290 கோடி பரிசு விழுந்து இருந்தது. இதனால் ஜூலியட் இன்ப அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு கையும்,ஓடவில்லை். காலும் ஓடவில்லை. இதுபற்றி அவர் தனது குடும்பத்தினருக்கு தெரிவித்தார். இதை கேட்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பரிசு பெற்ற வேகத்தில் ஜூலியட் உடனடியாக ரூ.2 கோடி மதிப்பிலான சொகுசு காரை வாங்கினார்.

    • இந்திய பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் கோவிலை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
    • கோவில் சேதப்படுத்தப்பட்ட செயலுக்கு டொரோண்டாவில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஒட்டாவா:

    கனடாவில் உள்ள பிராம்ப்டனில் கவுரிசங்கர் மந்திர் என்று அழைக்கப்படும் ஒரு பிரபலமான இந்து கோவில் உள்ளது.

    இந்திய பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் இந்த கோவிலை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இந்த செயலுக்கு டொரோண்டாவில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக துணை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினருக்கு இந்த செயலானது கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. வெறுக்கத்தக்க காழ்ப்புணர்ச்சி காரணமாக செய்யப்பட்ட இந்த செயல் இந்திய சமூகத்தினரின் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நாங்கள் கனடா அதிகாரிகளிடம் எங்களின் கவலைகளை தெரிவித்துள்ளோம் என கூறப்பட்டுள்ளது.

    காளிஸ்தான் ஆதரவாளர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக கனடா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பிராம்ப்டனில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இதுவரை 3 முறை கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ராஜபக்சே சகோதரர்கள் கனடாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
    • மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக 4 பேர் மீதும் இந்நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஒட்டாவா:

    இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் புரட்சி வெடித்ததை தொடர்ந்து, அங்கு ஆட்சியில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி விலகினர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஜூலையிலும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மே மாதமும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து ரணில் விக்ரமசிங்க அதிபராக பொறுப்பேற்றாா்.

    இந்நிலையில், இலங்கை முன்னாள் அதிபர்களான கோத்தபய, மகிந்த ராஜபக்சே, ராணுவ அதிகாரிகள் 2 பேர் என 4 பேர் கனடாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

    மேலும் கனடாவில் உள்ள 4 பேரின் சொத்துக்கள் மற்றும் நிதி செயல்பாடுகள் முடக்கப்படும் என அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக 4 பேர் மீதும் கனடா நாடு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    • கனடா நாட்டில் வெளி நாட்டு முதலீட்டாளர்கள் ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவித்தனர்.
    • கனடா அரசு வெளிநாட்டினர் சொத்துக்கள் வாங்க தடை விதிக்க முடிவு செய்தது.

    ஒட்டாவா:

    கனடா நாட்டில் வெளி நாட்டு முதலீட்டாளர்கள் ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவித்தனர். மேலும் பல்வேறு நாட்டை சேர்ந்த அரசியல் வாதிகள். முக்கிய பிரமுகர்கள், தொழில் அதி பர்கள் என பலர் சொத்துக் கள் வாங்கினார்கள்.

    இதன் காரணமாக கனடாவில் வீடுகள் மற்றும் சொத்துக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த ஆண்டு மட்டும் வீட்டு விலைகள் 20 சதவீதம் உயர்ந்தது. அதேபோல் வீட்டு வாடகையும் கணிசமான அளவு அதிகரித்தது. இதனால் கனடா நாட்டினர் தங்கள் சொந்த நாட்டில் சொத்துக்கள் வாங்க கடும் சிரமத்தை சந்தித்தனர். இதையடுத்து சொத்துக்கள் விலை உயர்வால் ஏற்பட்டு உள்ள பிரச்சினைகளை குறைக்கும் வகையிலும் சொந்த நாட்டினருக்கு உதவும் நோக்கத்திலும் கனடா அரசு வெளிநாட்டினர் சொத்துக்கள் வாங்க தடை விதிக்க முடிவு செய்தது.

    இதற்கான சட்டம் இயற்றப்பட்டு அது அமலுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. இதனால் கனடாவில் இனி வெளிநாட்டினர் சொத்து வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    கனடாவில் குடியேறியவர்கள் மற்றும் நிரந்தரமாக வசித்து வரும் வெளிநாட்டினருக்கும் இந்த தடை பொருந்தாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • கனடாவின் டொராண்டோ புறநகரில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
    • துப்பாக்கியால் சுட்ட நபர் யார் என்பது தெரியவில்லை.

    டொராண்டோ:

    கனடாவின் டொராண்டோ புறநகரில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மர்மநபரை சுட்டுக் கொன்றனர்.

    இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஜேம்ஸ் கூறும்போது, டொராண் டோவின் புறநகரில் மர்ம நபர் சுட்டதில் பொது மக்கள் 5 பேர் உயிரிழந்துள் ளனர். ஒருவர் படுகாய மடைந்துள்ளார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கியால் சுட்ட நபர் யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றார்.

    • கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் சீக்கிய இளைஞர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
    • விசாரணை நடத்திய போலீசார் இது படுகொலை என சந்தேகிக்கின்றனர்.

    ஒன்டாரியோ:

    கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் சன்ராஜ் சிங் (24) என்ற சீக்கிய இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு காயங்களால் இறந்து கிடந்தார். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரது மரணத்திற்கு கொலையே காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர், கனடாவில் இந்த மாதத்தில் இது போன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

    டிசம்பர் 3-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பதிலளித்த ​​எட்மண்டன் நகர் காவல் துறையினரால் சன்ராஜ் சிங் கண்டுபிடிக்கப்பட்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கடந்த வாரம் இந்திய வம்சாவளியான 21 வயது கொண்ட பவன்பிரீத் கவுர் என்ற சீக்கிய இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

    ஒரே மாதத்தில் சீக்கியர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடந்துள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் சீக்கிய இளம்பெண் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.
    • தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இது திட்டமிட்ட படுகொலை என சந்தேகிக்கின்றனர்.

    ஒன்டாரியோ:

    கனடாவில் ஒன்டாரியோ மாகாணத்தில் மிஸ்சிசாவ்கா நகரில் பவன்பிரீத் கவுர் (21) என்ற சீக்கிய இளம்பெண் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் கவுர் படுகாயம் அடைந்துள்ளார்.

    தகவலறிந்து சம்பவ பகுதிக்கு போலீசார் சென்றனர். பிராம்ப்டன் பகுதியைச் சேர்ந்த அவரை படுகாயங்களுடன் கண்ட போலீசார், உயிர் காக்கும் சிகிச்சைகளை அளித்துள்ளனர். எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இது திட்டமிட்ட படுகொலை என சந்தேகிக்கின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய வம்சாவளியான 18 வயது கொண்ட மேஹக்பிரீத் சேத்தி என்பவரை உயர்நிலை பள்ளி ஒன்றில் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து கத்தியால் குத்தி படுகொலை செய்தது நினைவிருக்கலாம்.

    • கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் முதல் இடத்தில் உள்ளனர்.
    • கடந்த ஒரு ஆண்டில் மட்டும் கனடாவில் 1 லட்சம் இந்தியர்கள் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளனர்.
    • இந்தியர்கள் அதிகளவில் பயன்பெறுவார்கள் என நம்பப்படுகிறது.

    டொராண்டோ :

    2-ம் உலகப்போர் முடிவில் கனடா நாட்டின் ராணுவம் உலகின் வலுமிக்க படைகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது பிற வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடுகையில் கனடாவின் பாதுகாப்பு படை மிகவும் சிறியது.

    கனடா, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக அதற்கு அருகாமையில் இருப்பதாலும், நேட்டோ மற்றும் நோராட் ஆகிய ராணுவ கூட்டமைப்புகளில் உறுப்பினராக இருப்பதாலும் அதன் பாதுகாப்பு படை பெரிதாக இருக்க வேண்டிய தேவை இல்லை என்று சொல்லப்படுகிறது.

    இந்த சூழலில் சமீபகாலமாக கனடா ராணுவத்தில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான காலிபணியிடங்கள் இருப்பதாகவும், இந்த ஆண்டில் சுமார் 6 ஆயிரம் உறுப்பினர்களை புதிதாக சேர்க்க இலக்கு வைக்கப்பட்ட நிலையில், அதில் பாதி பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் ராணுவத்தில் சேரலாம் என அந்த நாட்டின் ராணுவம் அறிவித்துள்ளது.

    இதுவரையில், கனடாவில் வசித்து வரும் நிரந்தர குடியிருப்பாளர்கள் ராணுவ வெளிநாட்டு விண்ணப்பத்தாரர் என்கிற நுழைவு திட்டத்தின் கீழ் மட்டுமே ராணுவத்தில் சேர தகுதி பெற்றிருந்தனர். தனிநபர்களுக்கான இந்த திட்டம் பயிற்சி செலவுகளை குறைப்பதோடு, விமானி அல்லது டாக்டர் போன்ற சிறப்பு தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவும்.

    ஆனால் தற்போது கனடா நாட்டின் குடிமக்களை போலவே 18 வயதுக்கு மேற்பட்ட நிரந்தர குடியிருப்பாளர்கள் ராணுவத்தில் எளிதில் சேரலாம். அதேபோல் 16 வயது நிரம்பியவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் ராணுவத்தில் இணையலாம். ராணுவத்தில் அதிகாரியாகும் எண்ணம் இருந்தால் அதற்குரிய கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

    கனடா ராணுவத்தின் இந்த அறிவிப்பால் இந்தியர்கள் அதிகளவில் பயன்பெறுவார்கள் என நம்பப்படுகிறது. ஏனெனில் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் முதல் இடத்தில் உள்ளனர்.

    கனடாவுக்கு வரும் 5 வெளிநாட்டவர்களில் ஒருவர் இந்தியர் என புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் கனடாவில் 1 லட்சம் இந்தியர்கள் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளனர். 2025-ம் ஆண்டுக்குள் 5 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க கனடா அரசு முடிவு செய்திருக்கிறது.

    எனவே ராணுவத்தில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினரை அனுமதிப்பதன் மூலம் ராணுவ பலத்தை கணிசமாக அதிகரிக்க முடியும் என கனடா ராணுவம் நம்புகிறது.

    • கைத்துப்பாக்கி விற்பனையை உடனடியாக முடக்க கனடா பிரதமர் ட்ரூடோ உத்தரவிட்டார்.
    • இது உடனடியாக அமல்படுத்தப்படும் எனவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

    ஒட்டாவா:

    கனடாவில் கைத்துப்பாக்கிகளின் விற்பனை, வாங்குதல் மற்றும் பரிமாற்றம் செய்வதற்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது என்றும், இது உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

    கனடா பாராளுமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக விவாதித்தனர். புதிய கைத்துப்பாக்கி முடக்கம் ஒரு உடனடி நடவடிக்கை என ட்ரூடோ நிர்வாகம் கூறிவந்தது. இந்த மசோதா தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், மக்கள் கொல்லப்படும்போது, ​​மக்கள் பாதிக்கப்படும்போது, பொறுப்பான தலைமை நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். துப்பாக்கிகள் சம்பந்தமாக மீண்டும் பல கொடூரமான சம்பவங்களை உதாரணங்களாக நாங்கள் பார்த்திருக்கிறோம்.. மக்கள் இனி கனடாவிற்குள் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது. மேலும் அவர்கள் புதிதாக வாங்கிய கைத்துப்பாக்கிகளை நாட்டுக்குள் கொண்டுவர முடியாது என தெரிவித்தார்.

    • கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவும் ராணி 2-ம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்றார்.
    • ஜஸ்டீன் ட்ரூடோ கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளார்.

    ஒட்டாவா :

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் உடல் நலக்குறைவால் கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். அவரின் இறுதி சடங்கு லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவும் ராணி 2-ம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்றார்.

    இந்த நிலையில் ராணியின் இறுதி சடங்குக்கு முன்பாக ஜஸ்டீன் ட்ரூடோ லண்டனில் உள்ள ஒரு ஓட்டலில் இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பியானே வாசித்தபடி மகிழ்ச்சியாக பாடல் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் ஜஸ்டீன் ட்ரூடோ கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளார்.

    கனடா நாட்டினர் பலரும் சமூக வலைத்தளங்களில் ஜஸ்டீன் ட்ரூடோவை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் "ராணியின் மறைவுக்கான துக்கத்தில் கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது அவமானம்" என குறிப்பிட்டுள்ளார்.

    அதே சமயம் இது ஒரு சாதாரண விஷயம் என்றும் வேண்டுமென்றே பெரிதுபடுத்தப்பட்டதாகவும் சிலர் ஜஸ்டீன் ட்ரூடோவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

    • தாக்குதல் நடத்திய அந்த நபர் ஒரு வாகனத்தை திருடி கொண்டு தப்பி சென்றார்.
    • மர்ம நபரை பிடிக்க பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    கனடாவின் டொரண்டோ மேற்கு பகுதியில் உள்ள மிசிசாகாலில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட்டார்.

    இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய அந்த நபர் ஒரு வாகனத்தை திருடி கொண்டு தப்பி சென்றார். இதையடுத்து அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது மற்றொரு பகுதியில் துப்பாக்கி சூடு நடத்திய அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • மைல்ஸ் சாண்டர்சன் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார்.
    • மைல்ஸ் சாண்டர்சன் கடந்த பிப்ரவரி மாதம் ஜெயிலில் இருந்து பரோலில் வெளியில் வந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கனடாவின் சஸ்காட் செவன் மாகாணத்தில் பொதுமக்கள் மீது சகோதரர்களான டேமியன் சாண்டர்சன், மைல்ஸ் சாண்டர்சன் கத்திக்குத்து நடத்தினர். இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயம் அடைந்தனர். தப்பி ஓடிய இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில் டேமியன் சாண்டர்சன், அப்பகுதியில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன.

    தலைமறைவாக இருந்த மைல்ஸ் சாண்டர்சனை தேடி வந்தனர். இந்தநிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். மைல்ஸ் சாண்டர்சன் சஸ்கட்செவனில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு காரை திருடி சென்று தப்பி சென்றபோது போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.

    அவரது உடலில் ஏராளமான காயங்கள் இருந்தது. இதையடுத்து அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ரோண்டா பிளாக்மோர் கூறும்போது, மைல்ஸ் சாண்டர்சன் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார். உடனே அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.

    அவர் தனக்கு தானே சுயமாக காயங்களை ஏற்படுத்தி கொண்டுள்ளார். இதனால் அவர் உயிரிழந்தார் என்றனர்.

    டேமியன் மற்றும் மைல்ஸ் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதில் மைல்ஸ் சாண்டர்சன் கடந்த பிப்ரவரி மாதம் ஜெயிலில் இருந்து பரோலில் வெளியில் வந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×