என் மலர்
செய்திகள்

வங்கிகளில் பெற்ற அனைத்து கடனையும் திருப்பி செலுத்த தயார் - விஜய் மல்லையா
லண்டன்:
தொழில் அதிபர் விஜய் மல்லையா (62) வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்று விட்டார். தற்போது அவர் லண்டனில் தங்கியுள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயற்சி மேற் கொண்டுள்ளது.
இந்த நிலையில் அவர் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “நான் பொதுத்துறை வங்கிகளின் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்ட குற்றவாளி என அரசியல்வாதிகளும், ஊடகங்களும் உரத்த குரலில் கூறி வருகின்றனர். இவை அனைத்தும் தவறானவை.
கடன் தொகையை செலுத்த கர்நாடக ஐகோர்ட்டு முன் ஒப்புக் கெண்டேன். அதன்பிறகும் என்னை நேர்மையான முறையில் நடத்த மறுப்பது வேதனைஅளிக்கிறது.
விமான எரிபொருள் விலை ஏற்றத்தின் காரணமாகவே எனது கிங் பிஷர் விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது. கச்சா எண்ணெய் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பேரல் 140 அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்ந்ததால் கிங் பிஷர் விமான நிறுவனம் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிட்டது.

நஷ்டம் அதிகமானதால் வங்கியில் பணம் பெற வேண்டி வந்தது. தற்போது நான் கடன் பெற்ற அசல் தொகையில் 100 சதவீதத்தையும் திரும்ப செலுத்த தயாராக இருக்கிறேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் மிகப்பெரிய மதுபான ஆலை குழுமத்தை நடத்தியிருக்கிறேன்.
மாநில அரசுகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை வரியாக அளித்து இருக்கிறேன். கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் மாநிலங்களில் நல்லதொரு வருவாயை தந்துள்ளது.
ஆனால் துரதிருஷ்டவசமாக விமான நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது. இருந்தாலும் தற்போது வங்கிகளுக்கு நான் பெற்ற கடன் தொகையை செலுத்த தயாராக இருக்கிறேன். அதனால் நஷ்டம் எதுவும் இல்லை.
என்னை இந்தியாவுக்கு அழைத்து வர வேகமாக தீவிரம் காட்டப்படுகிறது. இது ஒரு சட்டப் பிரச்சினை. ஆனால் அதில் மிக முக்கியமானது மக்கள் பணம்தான். அதை 100 சதவீதத்தையும் முழுமையாக திரும்ப தருவதாக கூறுகிறேன். வங்கிகளும், அரசும் அதை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். நான் திரும்ப தரும் தொகையை ஏற்க மறுப்பது ஏன்?” என தெரிவித்துள்ளார்.
விஜய் மல்லையா டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மிசெலை இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு கடத்தல் விவகாரத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். இதேபோன்று மல்லையா, நிரவ்மோடி மற்றும் மெகுல் ஜோக்கி ஆகியோரும் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே விஜய் மல்லையா மீதான நாடு கடத்தல் வழக்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் கோர்ட்டில் வருகிற 10-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. #VijayMallya