என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இன்ஸ்டாகிராமில் பழகி ஐ.டி. பெண் ஊழியரை திருமணம் செய்வதாக ஏமாற்றி நகை- பணம் அபேஸ்: வாலிபர் கைது
- அந்த பெண், பல தவணைகளாக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும் 8 ½ பவுன் தங்க நகையையும் கொடுத்திருக்கிறார்.
- பெண் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கோவை:
கோவை மாவட்டம் காரமடை பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும், கோவை பூ மார்க்கெட் தியாகராஜா தெருவைச் சேர்ந்தவர் பாக்கிய அருண் (26 ) என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பாக்கிய அருண், அந்த பெண்ணை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஆசை வார்த்தை கூறி இருக்கிறார்.
இதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து அவருடன் பழகி வந்துள்ளார். அப்போது பாக்கிய அருண், புதிய தொழில் தொடங்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதற்காக அந்த பெண், பல தவணைகளாக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும் 8 ½ பவுன் தங்க நகையையும் கொடுத்திருக்கிறார்.
பணம்- நகையை பெற்றுக்கொண்ட பாக்கிய அருண், அந்த பெண்ணை சந்திப்பதை தவிர்த்துள்ளார். அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரிடம் வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்ததுடன் நகை- பணத்தையும் திரும்ப கொடுக்க மறுத்துள்ளார்.
சம்பவத்தன்று பீளமேடு அருகில் பாக்கிய அருணை சந்தித்த அந்த பெண், நகை- பணத்தை கேட்டுள்ளார். அதற்கு பாக்கிய அருண், அந்த பெண்ணை அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் பீளமேடு போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்கு பதிவு செய்து பாக்கியஅருணை கைது செய்து சிறையில் அடைத்தார். பாக்கிய அருண் சமீபகாலமாக கோவை ரெட்பீல்ட் பகுதியில் வசித்து வந்துள்ளார்.






