என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நுங்கம்பாக்கம் விடுதியில் அதிர்ச்சி சம்பவம்: மதுபோதையில் மயங்கிய பெண்ணிடம் வாலிபர் பாலியல் அத்துமீறல்
    X

    நுங்கம்பாக்கம் விடுதியில் அதிர்ச்சி சம்பவம்: மதுபோதையில் மயங்கிய பெண்ணிடம் வாலிபர் பாலியல் அத்துமீறல்

    • பெரம்பூரைச் சேர்ந்த இளம்பெண் தனது ஆண் நண்பர்கள் இருவருக்கு போன் செய்து விடுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.
    • ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் பெரம்பூரை சேர்ந்த இளம்பெண், அரசுத்துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னை பெரம்பூரைச் சேர்ந்த இளம்பெண்ணும் வேலூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர்.

    தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இருவரும் கடந்த 27-ந்தேதி நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகரில் உள்ள விடுதி ஒன்றில் 2 அறைகளை பதிவு செய்து தங்கினார்கள். அப்போது இருவரும் விடுதி அருகில் வைத்து நன்றாக மது அருந்தி உள்ளனர்.

    அப்போது பெரம்பூரைச் சேர்ந்த இளம்பெண் தனது ஆண் நண்பர்கள் இருவருக்கு போன் செய்து விடுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.

    இதையடுத்து அந்த 2 வாலிபர்களும் இளம்பெண்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றனர்.

    பின்னர் 4 பேரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கு ஏறிய நிலையில் அனைவரும் விடுதி அறையிலேயே படுத்து தூங்கி உள்ளனர்.

    வேலூரை சேர்ந்த இளம்பெண்ணும் போதையில் தள்ளாடிய படியே மது மயக்கத்தில் தூங்கி உள்ளார்.

    நீண்ட நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது, அவரது ஆடைகள் கலைந்திருந்தன. அலங்கோலமான நிலையில் அவர் காட்சி அளித்துள்ளார். இதன் பிறகே அவர் மதுபோதையில் ஆண் நண்பரின் அறையில் சென்று தூங்கியது தெரியவந்தது. அருகில் பெண் தோழியின் ஆண் நண்பர் படுத்திருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அந்த ஆண் நண்பர் தான் மதுபோதையில் வேலூர் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து வேலூர் பெண் தனது தோழியான பெரம்பூர் இளம்பெண்ணிடம் சண்டை போட்டுவிட்டு ஊருக்கு சென்று விட்டார்.

    அங்கு தனது தாயிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்து கண்ணீர் விட்டு உள்ளார். அவரது அறிவுறுத்தலின் பேரில் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.

    வேலூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினார்கள். பாலியல் அத்துமீறல் சம்பவம் நடந்த இடம் ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால், இந்த வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

    இதையடுத்து ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் பெரம்பூரை சேர்ந்த இளம்பெண், அரசுத்துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    பின்னர் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மதுபோதையில் 2 இளம்பெண்கள் ஆண் நண்பர்களோடு தூங்கியதில் இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    Next Story
    ×