என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்தது விஜய் செய்த பெரிய பித்தலாட்டம்- வைகோ கடும் தாக்கு
- தற்போது திராவிட இயக்கம் இருக்க கூடாது என தமிழகத்தில் நினைக்கிறார்கள்.
- அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர் விஜய்.
சென்னை:
ம.தி.மு.க. நிர்வாகக் குழுக்கூட்டம், அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் இன்று எழும்பூரில் உள்ள தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு. ராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் உயர் நிலைக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகக் குழு உறுப்பி னர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அவசரகதியில் செய்யப்படும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை என்பது மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.
அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு அரசின் சார்பில் விதிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதில், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்க வைப்புத் தொகை ரூ.1 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை செலுத்த வேண்டும் என்றும், அரசியல் கட்சிகள் குறிப்பிட்டதைவிட பொதுக்கூட்டத்தில் 50 சதவீதம் பேர் பங்கேற்றால் வைப்புத் தொகை திருப்பித் தரப்படாது என்றும் கூறப்பட்டிருப்பது நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகக் குழு கூட்டத்தில் வைகோ பேசியதாவது:-
2011-ல் எங்களுடன் அ.தி.மு.க. கூட்டணி பேசிய நேரத்தில் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் தாயகம் வந்து பேசினார்கள். 12 தொகுதிகள் தருவதாக கூறப்பட்டது.
அப்போது ஒ.பி.எஸ்., ஜெயலலிதாவிடம் ம.தி.மு.க. கூட்டணிக்கு வர தயாராக இல்லை என்று தவறான தகவல் கூறினார். அதனால்தான் 2011-ல் தேர்தலை புறக்கணித்தோம். அப்போது செய்த தவறுக்கு தான் ஓ.பி.எஸ். இப்போது அனுபவிக்கிறார். 15 தொகுதி, ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி ம.தி.மு.க.வுக்கு கொடுக்க ஜெயலலிதா தயாராக இருந்து இருக்கிறார். ஆனால் ஒ.பி.எஸ்.தான் திட்டமிட்டு ஏதோ குளறுபடி செய்து இருக்கிறார். இந்த தகவல் பின்னர் தான் எனக்கு தெரியவந்தது.
தற்போது திராவிட இயக்கம் இருக்க கூடாது என தமிழகத்தில் நினைக்கிறார்கள். அதனால் தான் திராவிட இயக்கத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதனால் தான் ம.தி.மு.க., தி.மு.க. உடன் கூட்டணியில் தொடர்ந்து இருக்கிறோம்.
பொதுக்குழுவில் விஜய் தி.மு.க.வை மிக மோசமாக விமர்சித்து இருக்கிறார். உயிரிழந்த 41 பேர் குடும்பத்தை கரூர் சென்று சந்திக்காமல் மாமல்லபுரம் வரவைத்து சந்தித்தது இதுவரை நடக்காதது. இது மிகப்பெரிய பித்தலாட்டம்.
எங்களுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி என விஜய் பேசுகிறார். அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர் விஜய். காகித கப்பலில் கடல் தாண்ட நினைக்கிறார். அவர் கனவு பலிக்காது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளுக்கு எதிராக தி.மு.க. போராட்டதை அறிவித்து இருக்கிறது. இதில் ம.தி.மு.க. கலந்து கொள்ளும்.
இவ்வாறு அவர் பேசினார்.






