என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுரை மாநாட்டு மேடைக்கு வருகை தந்தார் த.வெ.க. தலைவர் விஜய்
- மாநாட்டில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் திரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மாநாட்டு விழா மேடைக்கு தவெக தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர், தாயார் ஷோபா வருகை தந்தனர்.
த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன.
இதுவரை தமிழகத்தில் நடந்த எந்த ஒரு கட்சி மாநாடும் இந்தளவு பிரமாண்டமான மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று நள்ளிரவு முதல் அலை அலையாக குவிந்த லட்சக்கணக்கான தொண்டர்களால் மாநாடு நடைபெறுவது காலையா, மாலையா? என்று கேட்கும் அளவிற்கு இருந்தது.
தற்போது வரை, மாநாட்டில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் திரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, மாநாட்டு விழா மேடைக்கு தவெக தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர், தாயார் ஷோபா வருகை தந்தனர். சந்திரசேகர் தவெக நிர்வாகிகளை அறிமுகம் செய்தனர்.
தொடர்ந்து, த.வெ.க. மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது மாநாடு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. மேளதாள வாத்தியங்கள் முழங்க தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு தொடங்கியது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் மாநாட்டின் மேடைக்கு வருகை தந்தார்.






