என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க. கூட்டத்தில் பறந்த த.வெ.க. கொடி:  பிள்ளையார் சுழி போட்டாச்சு... கூட்டணி குறித்து பேசிய இ.பி.எஸ்.
    X

    அ.தி.மு.க. கூட்டத்தில் பறந்த த.வெ.க. கொடி: பிள்ளையார் சுழி போட்டாச்சு... கூட்டணி குறித்து பேசிய இ.பி.எஸ்.

    • தி.மு.க. ஆட்சியில் பெண்கள், குழந்தைகள், ஏன் மூதாட்டிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை.
    • கரூரில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறுகிறார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாணார்பாளையம் பகுதியில் நேற்று இரவு திரண்டிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணி வலுவாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அது வெற்று கூட்டணி. ஆனால் நமது கூட்டணி வெற்றி கூட்டணி. வெல்லுகிற கூட்டணி நம் தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி. அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கும்.

    (த.வெ.க.) கொடி பறக்குது... பிள்ளையார் சுழி போட்டாங்க... எழுச்சி ஆரவாரம்... இந்த கூட்டத்தின் ஆரவாரம் மு.க.ஸ்டாலின் செவியை துளைத்துக்கொண்டு போகப்போகிறது. உங்களுடைய திட்டம் நிறைவேறாது. ஆகாயத்தில் கோட்டை கட்டி கனவு கண்டு கொண்டு இருக்கிறார். அவர் தங்களது கூட்டணியை நம்பி இருக்கிறார். மீண்டும் ஆட்சியை அமைத்துவிடலாம் என்று கனவு காண்கிறார். அவரது கனவு கானல் நீராக போகும். தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்கள் எவ்வளவு துன்பத்தையும், துயரத்தையும் அனுபவித்து வருகிறார்கள்.

    தி.மு.க. ஆட்சியில் பெண்கள், குழந்தைகள், ஏன் மூதாட்டிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் எப்போது எல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ? அப்போது எல்லாம் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருக்கும். தற்போது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாக இருக்கிறார்கள். அதனை கட்டுப்படுத்தக்கோரி சட்டசபையிலும், பல்வேறு போராட்டங்கள் வாயிலாகவும் வலியுறுத்தினோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அ.தி.மு.க. ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடத்தப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் சட்டம் சந்தி சிரிக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் வறுமையால் உடல் உறுப்புகளை மக்கள் விற்பனை செய்யக்கூடிய அவலம் இருந்து வருகிறது. தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான ஒரு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு கிட்னி எடுக்கப்பட்டது. ஆனால் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் கிட்னி முறைகேட்டை மதுரை ஐகோர்ட்டு கடுமையாக கண்டித்து உரிய விசாரணை நடத்தவும் அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால் தனியாக சிறப்பு விசாரணை நடத்தப்படவில்லை.

    கரூர் சம்பவத்தில் 41 பேரின் உயிர்கள் பலியாகி இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவோடு, இரவாக அங்கு சென்றுள்ளார். உடனடியாக ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுபோன்று அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன?. அதிகாரிகளை வைத்து அங்கு என்ன நடந்தது? என்பது பற்றி அதிகாரிகளும், போலீஸ் உயர் அதிகாரிகளும் கூறுகிறார்கள்.

    அரசியல்வாதிகள் அரசியல் பேசலாம். ஆனால் அதிகாரிகள் அரசியல் பேசலாமா?. இதில் இருந்து கரூரில் திட்டமிட்டு சதி நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. இதனால் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை தேவை என வலியுறுத்தி வருகிறோம்.

    கரூரில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறுகிறார்கள். இதனால் காவல்துறை விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும். எனவே, மக்களுக்கு நியாயம், உண்மை தெரிய வேண்டும் என்றால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். அப்போது தான் இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்ற உண்மை வெளிவரும்.

    தி.மு.க. ஆட்சி அமைந்து 53 மாதங்கள் முடிந்துவிட்டன. இன்னும் உங்களுக்கு 7 மாதங்கள் தான் ஆயுட்காலம். விரைவில் தி.மு.க. ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×