என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
- சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் த.வெ.க. தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை அமைத்து பணியாற்றி வருகிறார்.
- பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் த.வெ.க. தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை அமைத்து பணியாற்றி வருகிறார். கட்சியில் உறுப்பினர் சேர்க்கை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், மறுபக்கம் மக்கள் சந்திப்பு, அரசியல் நகர்வுகளில் விஜயும், கட்சியின் மாநில நிர்வாகிகளும் தீவிரமாக செயலாற்றுகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு, இடையில் சுற்றுப்பயணத்தில் தொய்வு ஏற்பட்டது. அதனையடுத்து காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் அதேபோல் சமீபத்தில் நிகழ்ச்சி நடந்தது. தேர்தல் நெருங்கிவரும் சூழலில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும், தேர்தல் களப் பணிகளை சீரிய முறையில் முன்னெடுக்கும் வகையில் கட்சி ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, 234 தொகுதிகளில் 69 ஆயிரம் பூத் கமிட்டிகள் நியமிக்கப்பட்டு, அவர்களும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து த.வெ.க.வுக்கு ஆதரவு திரட்டுகிறார்கள். மேலும் தேர்தல், கட்சி தொடர்பான பணிகளை முடுக்கிவிடும் விதமாக முக்கிய நிர்வாகிகள் கூடி ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை அவ்வப்போது செய்கின்றனர்.
இந்த நிலையில் பனையூர் த.வெ.க. அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்புச் பொதுச்செயலாளர் அருண்ராஜ் உள்ளிட்டோர் வந்தனர்.
இதையடுத்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜயின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை குறித்து விவாதிக்கப்படுகிறது.






