என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க. கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது- டி.கே.எஸ்.இளங்கோவன்
    X

    தி.மு.க. கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது- டி.கே.எஸ்.இளங்கோவன்

    • கூட்டணி குறித்து பொது வெளியில் பேசக் கூடாது.
    • காங்கிரஸ் தலைமை 5 நபர் குழுவை தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நியமித்து உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிக தொகுதிகள் வேண்டும் என்று கேட்பதுடன், ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் விஜய் தலைமையிலான த.வெ.க. கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆனால் கூட்டணி விவகாரம் பற்றி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியும் முடிவு செய்வார்கள் என்றும் மற்றவர்கள் சொல்வது அவரவர் சொந்த கருத்து என்றும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறி இருந்தார்.

    இந்த நிலையில் டெல்லியில் தமிழக காங்கிரசாருடன் ராகுல்காந்தி, கார்கே உள்ளிட்ட தலைவர்கள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். கூட்டணி தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். இதில் பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகள் தி.மு.க.வுடன் கூட்டணி தொடர வேண்டும் என்றே வலியுறுத்தி பேசி உள்ளனர்.

    அதுமட்டுமின்றி தி.மு.க. வுடன் கூட்டணியை தொடர ராகுல்காந்தி திட்டவட்டமாக முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கூட்டணி குறித்து பொது வெளியில் பேசக் கூடாது. சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிரக் கூடாது என்றும் நிர்வாகிகளிடம் அவர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

    இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தி.மு.க. செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி இதுவரை தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையோ அல்லது தேசிய காங்கிரஸ் தலைவரோ, தி.மு.க.வை விட்டு வேறு கட்சியில் பேசவில்லை என்றும், தி.மு.க.வுடன்தான் இருக்கிறோம் என்றும் பேசுகிறார்கள்.

    காங்கிரஸ் தலைமை 5 நபர் குழுவை தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நியமித்து உள்ளது. எனவே மேலிடம் தௌிவாக உள்ளது. இங்கு லோக்கலில் சில பேர் வேறுவிதமாக பேசுகிறார்களே தவிர, காங்கிரஸ் அதிகாரப்பூர்வமான தலைமை தி.மு.க.வுடன் இருப்பதை இதுவரை உறுதி செய்துள்ளது.

    அதில் எந்த மாற்றமும் அவர்கள் சொல்லவில்லை. இந்த கூட்டணி அப்படியே தொடர்கிறது.

    கே: காங்கிரசில் ஒரு சிலர், விஜய் கட்சியுடன் போகலாம் என்று பேசுகிறார்களே?

    ப: அப்படி பேசுபவர்கள் தலைவர்கள் இல்லை. இஷ்டத்துக்கு அவர்கள் கருத்தை சொல்கிறார்கள். எங்கு சொல்ல வேண்டுமோ அங்கு சொல்லாமல் பொது வெளியில் பேசுவதுதான் குழப்பத்தை உண்டாக்குகிறது. அதை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×