என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பணம் சம்பாதிக்க மும்மொழி, மக்களை ஏமாற்ற இருமொழியா?- எச்.ராஜா
- தி.மு.க. வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் அமலில் உள்ளது.
- தமிழகத்தில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
கோவை மாவட்ட பா.ஜ.க. சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சுந்தராபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஐ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.எராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
முன்னதாக எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தபோது வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக இருந்தது. ஆனால் அதனை தற்போது ரூ.12.75 லட்சமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உயர்த்தி சாதனை படைத்து உள்ளார்.
இதனால் மத்திய அரசுக்கு நேரடி வருவாயாக கிடைத்து வந்த ஒரு லட்சம் கோடி ரூபாய் குறைந்து உள்ளது. இருந்த போதிலும் நடுத்தர குடும்பத்தினரின் கையில் நிதி இருப்பு விகிதம் கூடும். இதனால் பொருட்கள் விற்பனை அதிகரிக்கும். அதன் மூலமாக பொருளாதாரம் உயர வாய்ப்பு உள்ளது.
மேலும் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் சொத்து பிணையமின்றி கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதுவும்தவிர விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக அமைந்து உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருமொழிக் கொள்கையை ஏற்பதாக கூறி உள்ளார். ஆனால் அவரது குடும்பத்தினர் உள்பட தி.மு.க. வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் அமலில் உள்ளது. தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் சமச்சீர் பாடத்திட்டதை அமல்படுத்தக்கோரி, நான் ஏற்கனவே போராட்டம் நடத்தி உள்ளேன்.
பணம் சம்பாதிக்க மும்மொழி, மக்களை ஏமாற்ற இருமொழி என்ற நிலைப்பாடை மாநில அரசு கையாளுகிறது. மேலும் தமிழகத்தில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
இதற்கு காரணமாக உள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். சி.பி.எஸ்.இ பள்ளிகளில் மும்மொழி பாடம் இருக்கலாம் என்றால் அரசு பள்ளிகளில் ஏன் மும்மொழி பாடத்திட்டம் அமலில் இருக்கக்கூடாது?
இவ்வாறு அவர் கூறினார்.






