என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தெரியாமல் சிக்கிக்கொண்டார்... ஸ்ரீகாந்த் ரொம்ப பாவம்- சீமான்
- திரையுலகில் நிறைய பேர் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள்.
- நான் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தியதன் மூலம், திடீரென முருகபெருமான் மீது அக்கறை வந்துள்ளது. தேர்தல் வருவதால், மாநாடு நடத்தி இருக்கிறார்கள். ஆண்டுதோறும் இதுபோன்ற மாநாடுகள் நடத்துவார்களா? தேர்தலில் வாக்குகள் வரவில்லை என்றால் நடத்தமாட்டார்கள்.
ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் எங்களின் பண்பாடு, செல்வம். எங்களின் உடன்பிறந்தவர்கள். அதனை வளர்த்தல் என்பது ஒரு தொழில் அல்ல. அது எங்களின் வாழ்க்கை முறை, விவசாயத்தின் நீட்சி.
ஆடு, மாடுகளுக்கு பேசும் திறன் இல்லாததால், அவற்றுக்காக நான் பேசுகிறேன். அதற்காகத்தான் ஜூலை 10-ந் தேதி மதுரையில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஆடு, மாடுகள் மாநாடு நடக்கிறது. அவற்றின் உரிமைக்காகவே இந்த மாநாடு நடத்த இருக்கிறேன்.
நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைதாகி இருக்கிறார். தனிப்பட்ட முறையில் எனக்கு அவரை நன்றாக தெரியும். ரொம்ப பாவம் அவர். இது என் கருத்து. திரையுலகில் நிறைய பேர் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள். புகழ்பெற்றவர்கள் கூட பயன்படுத்துகிறார்கள். அவர் தெரியாமல் சிக்கிக்கொண்டார். அவருக்காக நான் வருத்தப்படுகிறேன். அதிகாரங்களுக்கு தெரியாமல் இந்த போதைப்பொருள் வராது. திரையுலகில் மட்டுமல்ல, கல்லூரி, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்களில் கூட கஞ்சா, கொகைன், அபின் போன்ற போதைப்பொருட்கள் நீண்ட நாட்களாக விற்கப்படுகின்றன. அரசு நினைத்தால், போதைப்பொருள் ஒழிக்கப்படும்.
ஸ்ரீகாந்த் புகழ் பெற்ற நடிகர் என்பதால், அந்த செய்தி வெளியாகி வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. நடிகர் கைதானதால், போதைப்பொருள் ஒழிந்துவிட போகிறதா?
நான் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. கூட்டணி தொடர்பாக பொறுமையாக இருங்கள். பதில் அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






