என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2026 சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டி - இ.பி.எஸ். அழைப்பை நிராகரித்த சீமான்
- 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளோம்.
- தற்போது வரை நாம் தமிழர் கட்சியில் 150 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று பல கட்சிகள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. அத்தகைய ஒருமித்த கருத்துடன் இருக்கும் கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வர வேண்டும். இது தொடர்பாக இதுவரை நாங்கள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் நேரடியாக பேச்சுவார்த்தை எதையும் நடத்தவில்லை.
தி.மு.க.வை அகற்ற வேண்டும் என்ற மனநிலையில் இருப்பதால் அ.தி.மு.க. கூட்டணிக்கு விஜய், சீமான் வர வேண்டும் என்று நாங்கள் அழைக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது. எனவே உரிய நேரத்தில் சரியான கூட்டணி ஏற்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டி என்பதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதியாக உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளோம். தற்போது வரை நாம் தமிழர் கட்சியில் 150 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். 2 மாதத்திற்குள்ளாக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். எங்கள் கொள்கை என்பது தனித்து அரசியல்தான். ஏற்கனவே அதிமுக, திமுக கூட்டணியில் சேர்ந்த கட்சிகள் எல்லாம் காலப்போக்கில் காணாமல் போய்விட்டன. எனவே நாங்கள் தனித்து அரசியல் நோக்கி தான் முன்னெடுப்போம். எத்தனை காலம் ஆனாலும் எங்களின் தனித்து அரசியல் என்பது மாறாது என்று தெரிவித்துள்ளார்.






