என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

லட்சக்கணக்கில் மக்கள் கூடினாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த எம்.ஜி.ஆர். கையாண்ட தந்திரம்
- ஒவ்வொரு கூட்டத்திலும் எம்.ஜி.ஆர். கூட்ட நெரிசலை குறைக்கும் விதத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி உள்ளார்.
- 10 ஆண்டுகளுக்கு முன்பு வைகோ பேசிய ஒரு வீடியோவும் தற்போது வைரலாகிறது.
கரூரில் நடிகர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது ஒரு காரணமாக கூறப்பட்டாலும், திட்டமிடுதலில் பிழை ஏற்பட்டதே இதற்கான பிரதான காரணம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எந்தவொரு கூட்டத்திலும் மக்கள் பங்கேற்றாலும் அதில் அவர்களின் உயிர்களுக்கு பொறுப்பு அரசு என்றாலும், அதில் சரியான ஏற்பாடுகளை செய்யாவிட்டால் அதற்கு பொறுப்பு கூட்டம் நடத்துபவர்கள்தான் என்று கோர்ட்டு பல்வேறு தீர்ப்புகளில் கூறியிருக்கிறது.
போலீசார் தரப்பில், விஜய் கூட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் வந்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதைவிட பல மடங்கு மக்கள் கூடிய எம்.ஜி.ஆர். பொதுக்கூட்டங்களில், அசம்பாவிதம் நிகழாமல் நடந்திருக்கிறது என்பதுதான் முக்கியமானது.
அந்தக் காலத்தில் தொழில்நுட்ப வசதிகள் இல்லாமல் இருந்தாலும், மக்கள் எம்.ஜி.ஆரை பார்க்க ஒரு நாள் முன்பே கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து கூடிவிடுவார்கள். அவர் மேடைக்கு வரும்போது கூட்டம் ஆவலுடன் முன்னே அலைமோதி வந்தாலும், அதில் ஒரு ஒழுங்கு இருந்தது. அதற்கு காரணம் எம்.ஜி.ஆர். கையாண்ட நுணுக்கமான தந்திரங்கள்தான்.
ஒரு கூட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் இருந்தால், கூட்டம் முடிந்ததும் எம்.ஜி.ஆர். ''முதலில் பெண்களும், குழந்தைகளும் வெளியேறட்டும். ஆண்கள் அப்படியே நிற்கவும். உங்களுக்கு ஒரு தகவல் இருக்கிறது'' என்று அறிவித்தார். பெண்கள் வெளியேறியதும், ''உங்களிடம் சொல்ல எதுவும் இல்லை. பெண்களும் குழந்தைகளும் நெரிசலில் சிக்காமல் இருக்கத்தான் அப்படி சொன்னேன்'' என்று சிரித்தபடி கூட்டத்தை நிறைவு செய்தார். இதுபோன்று ஒவ்வொரு கூட்டத்திலும் எம்.ஜி.ஆர். கூட்ட நெரிசலை குறைக்கும் விதத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி உள்ளார்.
அதுபோல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வைகோ பேசிய ஒரு வீடியோவும் தற்போது வைரலாகிறது. அதில் அவர், "50 ஆயிரம் பேர் கூடிய இடத்தில் ஒருவன் விழுந்தாலே, 20 பேருக்கு உயிரிழப்பு நேரலாம். அதனால்தான் நான் கூட்டத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கச் சொல்கிறேன்'' என்று எச்சரித்துள்ளார். அவர் சொன்னதுபோல், சிறிய தவறே பெரும் விபத்துக்கு வழிவகுக்கும் என்பதை விஜய் கூட்டம் அரங்கேற்றி இருக்கிறது.
அதேபோல் கூட்டத்தினர் பாதுகாப்பு குறித்து விஜயகாந்த் பேசிய ஒரு வீடியோவும் வைரலாகி வருகிறது. இன்று அரசியல் கூட்டங்களில் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு என்பது மிக அவசியமானது. தொழில்நுட்ப வசதிகள், காவல்துறை கண்காணிப்பு, டிரோன் கேமரா, இரும்பு தடுப்புகள் என அனைத்தும் இருந்தாலும், தலைவரின் செயல்திறன், தந்திரம், மக்களிடம் நேரடியாக கூறும் கட்டுப்பாட்டு அறிவுறுத்தலே கூட்டத்தை பாதுகாப்பாக வைத்திருக்கிறது.
மக்களை ஈர்ப்பதற்கும் மேலாக, அவர்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் தலைவர் மட்டுமே உண்மையான மக்கள் தலைவராக இருப்பார் என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் பரிமாற்றப்பட்டு வருகிறது.






