என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. வரலாறு தெரியாமல் பேசுகிறார்- உதயநிதியை சாடிய ஆர்.பி.உதயகுமார்
- தி.மு.க. தான் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில், மன்னராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது.
- இனி ஒரு நாளும் உதயநிதி குடும்பம் தமிழகத்தை ஆளப்போவது கிடையாது.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிவகங்கை மாவட்டத்தில் பங்கேற்ற விழாவில் அ.தி.மு.க. வரலாறு தெரியாமல் பேசி உள்ளார். அ.தி.மு.க. என்பது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இந்த இயக்கத்தில் தாய்ப்பால் குடித்து, முகவரி பெற்றவர்கள், செல்வாக்கு பெற்றவர்கள் இந்த இயக்கத்தை விட்டு சென்ற பிறகும் இந்த இயக்கம் வலிமையாக உள்ளது. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று அ.தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இன்றைக்கு, 2 கோடி தொண்டர்கள் மனம்புண்படும் படி உதயநிதி பேசியுள்ளார். அ.தி.மு.க. யார் கட்டுப்பாட்டில் உள்ளது? என்று அரைவேக்காடு தனமாக பேசியுள்ளார். அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையில், தமிழக மக்கள் கட்டுப்பாட்டில், மக்கள் இதயங்களில் உள்ளது, அதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்.
தி.மு.க. தான் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில், மன்னராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இன்றைக்கு கருணாநிதியின் கொள்ளு பேரன், ஸ்டாலின் பேரன், உங்கள் மகன் இன்பநிதி இன்றைக்கு எந்த உழைப்பும் இல்லாமல் வந்துள்ளார். ஆகவே தி.மு.க. தான் ஒரு குடும்ப கட்டுப்பாட்டில் உள்ளது. தி.மு.க.வை தங்கள் குடும்ப கட்டுப்பாட்டில் வைத்தது போல தமிழகத்தையும் உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைத்தால், அது நடக்காது.
இனி ஒரு நாளும் உதயநிதி குடும்பம் தமிழகத்தை ஆளப்போவது கிடையாது. தமிழகத்தை இனி ஆளப் போவது எடப்பாடி பழனிசாமி தான் என மக்கள் தீர்ப்பு வழங்க உள்ளார்கள். உங்கள் பேச்சை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






