என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஏ.டி.ஜி.பி. ஜெயராமை சஸ்பெண்ட் செய்யுமாறு தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை
- பொது ஊழியரான கூடுதல் டி.ஜி.பி., பணி நிபந்தனைகளுடன் அரசால் நியமிக்கப்பட்டவர்.
- ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் சீருடையுடன் ஆஜரான போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிபதி, 'இந்த கடத்தல் வழக்கில் கூடுதல் டி.ஜி.பி.யை குற்றவாளியாக சேர்த்து விட்டீர்களா?. ஏன் போலீஸ் அதிகாரிகளை காப்பாற்றும் விதமாக போலீஸ் துறை செயல்படுகிறது? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு போலீஸ் தரப்பில், பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடத்தினால்தான் கூடுதல் டி.ஜி.பி.யின் பங்கு குறித்து தெரிய வரும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
கோர்ட்டில் ஆஜராகி இருந்த கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம், எனக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை என்றார். இதை ஏற்காத நீதிபதி, 'சிறுவன் கடத்தல் வழக்கில் போலீஸ் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. 2 போலீஸ் டிரைவர்கள் அந்த வாகனத்தை ஓட்டி உள்ளனர். எனவே, கூடுதல் டி.ஜி.பி.க்கு எதிரான குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் உள்ளது. எம்.எல்.ஏ.வை அரசு நியமிப்பது இல்லை. அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்.
ஆனால், பொது ஊழியரான கூடுதல் டி.ஜி.பி., பணி நிபந்தனைகளுடன் அரசால் நியமிக்கப்பட்டவர். அதனால், அவரை உடனே போலீசார் கைது செய்ய வேண்டும். இதன்மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் என்ன நடக்கும்? என்ற தகவல் பொது ஊழியர்களுக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமை சஸ்பெண்ட் செய்யுமாறு தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.






