என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நடிகர் கிருஷ்ணாவுடன் தொடர்பில் இருந்த நடிகர், நடிகைகள் யார்?- அதிரடி விசாரணையில் இறங்கும் போலீசார்
- கிருஷ்ணாவின் வாட்ஸ்-அப் குழுவில் 3 எழுத்து நடிகர் ஒருவரும், 3 எழுத்து நடிகை ஒருவரும், 4 எழுத்து இசையமைப்பாளர் ஒருவரும் தொடர்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
- நடிகர் கிருஷ்ணாவும் புழல் சிறையில் முதல் வகுப்பு அறையில்தான் தனியாக அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
போதைப்பொருள் வழக்கில் தற்போது சென்னை போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். கொக்கைன் போன்ற ஹை-டெக் போதைப்பொருளை விற்பனை செய்பவர்களையும் அதை பயன்படுத்துகிறவர்களையும் தற்போது வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். அந்தவகையில் கொக்கைன் போதைப் பொருளை விற்பனை செய்ததாக சேலத்தை சேர்ந்த பிரதீப் குமார், பெங்களூருவை சேர்ந்த ஆப்பிரிக்க நாட்டவரான ஜான் ஆகியோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். இவர்களை தொடர்ந்து, கொக்கைன் போதைப்பொருளை பயன்படுத்தியதாக பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்த் கொடுத்த தகவல் அடிப்படையில் கழுகு படத்தில் கதாநாயக நடித்த நடிகர் கிருஷ்ணாவும் அவருக்கு போதைப் பொருள் சப்ளை செய்த கெவின் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.
நடிகர் கிருஷ்ணா பயன்படுத்திய செல்போன் தகவல்கள்தான் அவரை தற்போது சிறையில் தள்ளி இருக்கிறது. நடிகர் கிருஷ்ணாவின் வாட்ஸ்-அப் குழுவில் இடம் பெற்றுள்ள நண்பர்கள் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு கிருஷ்ணா கொகைன் போதைப் பொருளை சப்ளை செய்துள்ளது பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளது. போலீசாரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இதனை அடிப்படையாக கொண்டுதான் தொடங்கியுள்ளது. கிருஷ்ணாவின் வாட்ஸ்-அப் குழுவில் 3 எழுத்து நடிகர் ஒருவரும், 3 எழுத்து நடிகை ஒருவரும், 4 எழுத்து இசையமைப்பாளர் ஒருவரும் தொடர்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் தற்போது தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
நடிகர் ஸ்ரீகாந்த் புழல் சிறையில் முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளார். தினமும் அவருக்கு காலை பத்திரிகைகள் வழங்கப்படுகிறது. அந்த பத்திரிகைகளில் வரும் செய்திகளை ஸ்ரீகாந்த் உன்னிப்பாக படிக்கிறாராம். நடிகர் கிருஷ்ணா கைதுசெய்யப்பட்ட தகவலை பத்திரிகை செய்தி வாயிலாக தெரிந்து கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா எங்கே அடைக்கப்பட்டுள்ளார்? என்றும், அவரை பார்க்க முடியுமா? என்றும், சிறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அவரை பார்க்க முடியாது என்று சிறை அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர். சிறையில் உள்ள நூலகத்துக்கு சென்று ஸ்ரீகாந்த் புத்தகங்களையும் விரும்பி படிக்கிறாராம். நடிகர் கிருஷ்ணாவும் புழல் சிறையில் முதல் வகுப்பு அறையில்தான் தனியாக அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், ஸ்ரீகாந்தை போல நடிகர் கிருஷ்ணா இரவில் தூக்கமில்லாமல் தவிக்கவில்லை. முதல் நாள் இரவிலேயே கிருஷ்ணா நன்றாக படுத்து தூங்கினாராம்.






