என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராமதாஸ்தான் தலைவர்: பாமக அலுவலக முகவரியை மாற்றி மோசடி- அன்புமணி மீது ஜி.கே. மணி குற்றச்சாட்டு
- அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் 28-5-2025-யுடன் முடிவடைந்து விட்டது.
- தலைவர் பதவி குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியிருந்தாலும், பதவிக்காலம் முடிந்த பின்னர் அது செல்லாது.
பாமக கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் 28-5-2025-யுடன் முடிவடைந்து விட்டது. அவருக்கு பதவியே இல்லை. தலைவர் பதவியே இல்லாதவர் எப்படி மாமல்லபுரத்தில் பொதுக்குழுவை கூட்ட முடியும்?. கட்சியின் அமைப்பு விதி, நிறுவனர் ராமதாஸ் ஒப்புதல் இல்லாமல் செயற்குழு, பொதுக்குழு என எந்த நடவடிக்கையும் செயல்படக் கூடாது எனக் கூறுகிறது.
விதியை மீறி எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும்?. மாமல்லபுரத்தில் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது. அதில் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளின் பதவியும் செல்லாது.
தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியிருந்தாலும், பதவிக்காலம் முடிந்த பின்னர் அது செல்லாது. 29ஆம் தேதி நிர்வாகிகள் குழு கூடி ராமதாஸை தலைவராக்க வேண்டும் எனக்கூறி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிர்வாகக்குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் ராமதாஸ் நிறுவனர் மற்றும் தலைவர் என அழைக்கப்படுகிறார். செயற்குழு நிர்வாகக்குழு எடுத்த முடிவை அங்கீகரிக்கிறது. அதன்பின் மாநில பொதுக்குழுவில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு எடுத்த முடிவை முழுமையாக அங்கீகரிக்கிறது.
தலைவர் என்று கடிதம் எழுதுவது மக்களை திசை திருப்புவதற்கான நாடகம். தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு முகவரி மாற்றி, தலைவர் எனச் சொல்லப்படுகிறது. இது மோசடி என வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதன் மூலமாகவே தேர்தல் ஆணையம் கடிதம் அங்கு சென்றுள்ளது. அந்த கடிதத்தை வைத்து அன்புமணி ராமதாஸ் தலைவர், வடிவேல் ராவணன் பொதுச் செயலாளர், திலகபாமா பொருளாளர் எனக் கூறுவது மோசடி.
இவ்வாறு ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.






