என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெட்ரோல், மதுபானங்கள் GST வரிக்குள் கொண்டுவரப்படுமா?
- இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் சிகரெட்டுக்கு 70 முதல் 80 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
- பெட்ரோல், மதுபானங்கள் ஜி.எஸ்.டி.க்குள் வந்தால் விலை கணிசமாக குறையும்.
சென்னை:
இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டது. ''ஒரே நாடு ஒரே வரி'' என்ற கோஷத்துடன் அறிமுகமானாலும், 2 முக்கிய பொருட்கள் இன்னும் அதற்குள் சேர்க்கப்படவில்லை. அவை பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்கள். இந்த 2 பொருட்களுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் தனித்தனி வரிகள் காரணமாக, மக்கள் அசல் விலையைவிட பலமடங்கு அதிகமாக செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் ரூ.40 தான். ஆனால் அதற்கு மத்திய அரசின் சுங்கவரி ரூ.20 முதல் ரூ.22 வரையும், மாநில அரசுகளின் வாட் வரி ரூ.18 முதல் ரூ.25 வரையும், டீலர் கமிஷன் ரூ.3 முதல் ரூ.4 வரையும் சேர்க்கப்படுகிறது. இதனால் அதன் இறுதி விலை மாநிலங்களுக்கு ஏற்ப ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதாவது அசல் விலை ரூ.40 இருந்தும், மக்களுக்கு 150 சதவீதம் கூடுதலாக கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதனை மக்கள் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடும். ஆனால் மதுபானங்களின் விலை மற்றும் அதில் போடப்படும் வரிகளை கேட்டால் தலைசுற்றும். உதாரணமாக, 750 மில்லி லிட்டர் பீர் பாட்டிலின் அதிகபட்ச விற்பனை விலை ரூ.180. ஆனால் அதன் அசல் விலை வெறும் ரூ.40 தான். அதாவது, கலால் வரி, சிறப்பு கட்டணம், வாட் வரி ஆகியவை அனைத்தும் சேர்ந்து தான் ரூ.180-க்கு விற்கப்படுகிறது. இதன் பொருள் அசல் விலையை விட 350 சதவீதம் கூடுதலாக மக்கள் செலுத்த வேண்டியுள்ளது.
மதுபானங்களில் மிக கொடுமையானது, வெளிநாட்டு தரத்தில் தயாரிக்கப்படும் இந்திய மதுபானங்களின் விலை. அதில் சாதாரண வகையின் அசல் விலை ரூ.52 தான், ஆனால் விற்பனை விலை ரூ.583. நடுத்தர வகையின் அசல் விலை ரூ.58 தான், ஆனால் விற்பனை விலை ரூ.708. பிரீமியம் வகையின் அசல் விலை ரூ.207 தான், ஆனால் விற்பனை விலை ரூ.1,292 ஆகிறது. இதன் பொருள் இந்த மதுபான வகைகளில் குறைந்தது 500 சதவீதம் முதல் 1,100 சதவீதம் வரை கூடுதல் விலை வசூலிக்கப்படுகிறது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் சிகரெட்டுக்கு 70 முதல் 80 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோலுக்கு 60 சதவீதம் மட்டுமே வரி. சில நாடுகளில் ஆடம்பர கார்கள் இறக்குமதிக்கு கூட அதிகபட்சம் 200 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் மதுபானங்களுக்கு விதிக்கப்படும் 500 முதல் 1,000 சதவீதம் வரை வரி, உலகிலேயே அதிகம் என்ற சாதனையைப் பெற்றுள்ளது.
பெட்ரோல், மதுபானங்கள் ஜி.எஸ்.டி.க்குள் வந்தால் விலை கணிசமாக குறையும். ஆனால் அதே நேரத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படும். தமிழ்நாட்டில் மதுபான விற்பனையிலிருந்து மட்டும் ஆண்டுதோறும் ரூ.55 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. பெட்ரோல் டீசல் விலைகளும் மத்திய, மாநில அரசுகளின் மிகப்பெரிய வருவாய் மூலாதாரம். இதுவே இன்றுவரை இந்த இரண்டு பொருட்களையும் ஜி.எஸ்.டி.க்கு வெளியே வைப்பதற்கான முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
ஆனால் தற்போதைய வரி சீர்திருத்தங்களில் சிகரெட், புகையிலை போன்ற பொருட்கள் ஏற்கனவே ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரப்பட்டு 40 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. இதேபோல எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்களையும் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என்பது நிபுணர்களின் வலியுறுத்தலாக உள்ளது. மக்கள் கொடுக்கும் பணம், அந்த பொருட்களின் தரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். ரூ.40 தரமுள்ள பொருளை ரூ.180-க்கு வரி என்ற பெயரில் வாங்கச் செய்வது தவறு. உயர்தர மதுபானங்களுக்கு கூடுதல் விலை வைப்பது சரியானது. ஏழைகள் அருந்தும் குறைந்த விலை மதுபானங்களுக்கு இவ்வளவு அதிக வரி விதிப்பது நியாயமற்றது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
ஆனால் அரசின் நிலைமை வேறு. விலை குறைந்தால் மக்கள் அதிகம் குடிப்பார்கள் என்பதே அவர்களின் வாதம். இது ஒரு வகை சரியான விளக்கம் என்றாலும், அரசு உண்மையில் சொல்ல வேண்டியது குடிக்கவே கூடாது என்பதே. ஆனால் நடைமுறையில் அவர்கள் சொல்வது ''நீ குடி, எனக்கு வரி கொடுத்துவிட்டு குடி'' என்ற நிலையாக இருக்கிறது என்று மக்கள் கூறுகின்றனர்.






