என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆசிரியர்கள் மீது அடக்குமுறை.. சமூக நீதி என்பதெல்லாம் வெறும் நாடகமா?- அண்ணாமலை
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- முதலமைச்சர் மு.ஸ்டாலின் ஒப்புதலுடன் நடந்த ஒரு திட்டமிட்ட அடக்குமுறை மட்டுமே.
முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று இரண்டு ஆசிரியர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பகுதி நேர ஆசிரியர்கள், கடந்த 14 கல்வி ஆண்டுகளாக, மாதம் வெறும் ₹12,500 ஊதியத்தில், பணி நிரந்தரப்படுத்தப்படாமல் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்கள், கடந்த 14 நாட்களாக, சம வேலைக்கு, சம ஊதியம் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தனது 2016 தேர்தல் அறிக்கையிலும், 2021 தேர்தல் அறிக்கையிலும் ஆசிரியர்களின் ஊதியச் சீரமைப்பு மற்றும் சம ஊதியம் குறித்து வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாணவர்கள், தங்கள் பெற்றோர்களின் உழைப்பிலும், ஆசிரியப் பெருமக்கள் அக்கறையிலும் சாதனை செய்யும்போது, வெட்கமே இல்லாமல் திமுக ஸ்டிக்கர் ஒட்டிப் பெருமை பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களின் வாழ்க்கை, பல ஆண்டுகளாகக் கேள்விக்குறியாய் இருப்பதை, தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.
நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் ஆசிரியப் பெருமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு ஊதியம் வழங்க மாட்டோம் என்று அச்சுறுத்துவது, முதலமைச்சர் மு.ஸ்டாலின் ஒப்புதலுடன் நடந்த ஒரு திட்டமிட்ட அடக்குமுறை மட்டுமே.
திமுக அரசு, கல்வியை மதிப்பதில்லை என்பதையே இது நிரூபிக்கிறது. சமத்துவம், சமூகநீதி என்றெல்லாம் வெறும் வாய்வார்த்தையில் நாடகமாடும் முதலமைச்சர், உண்மையில் ஆசிரியப் பெருமக்களுக்குக் கொடுப்பது அநீதியும் அச்சுறுத்தலும் தான்.
பகுதி நேர ஆசிரியர்களின் நீண்டகால வலி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டம் ஆகியவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஆசிரியப் பெருமக்களுக்குச் செய்துள்ள துரோகத்தையே காட்டுகிறது.
ஆசிரியர்களை அடக்கி, அச்சுறுத்தி, அவர்களின் உரிமைகளை நசுக்கும் திமுக அரசின் செயல்பாடுகள், தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு கருப்புப் புள்ளி. ஆசிரியர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவது, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையே படுகுழியில் தள்ளுவதற்குச் சமம்.
ஆசிரியர்களுக்கு மரியாதையும் பாதுகாப்பும் வழங்கும்போது மட்டுமே, சமூகம் முன்னேறும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் ஆசிரியர்களை குற்றவாளிகளாக நடத்தும் திமுக அரசின் இந்த அடக்குமுறையையும், அத்துமீறலையும், தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். விரைவில் இதற்கான பதிலும் திமுகவுக்குக் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






