என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

NDA கூட்டணிக்கு சசிகலா ஆதரவு கொடுப்பாரா? - நயினார் நாகேந்திரன் பதில்
- பிரதமர் மோடி தமிழகத்துக்கு எத்தனை முறை வந்தாலும் இந்த முறை வருவது என்பது மிக மிக வித்தியாசமான ஒரு சூழ்நிலை.
- மகாராஷ்டிரத்தில் 5 மாநகராட்சிகளை கைப்பற்றி இருக்கிறோம்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணி வலுவாக இருப்பதாகவும், எங்கள் கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவதாகவும் என்னிடம் நிருபர்கள் அவ்வப்போது கேள்வி எழுப்புவார்கள்.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி அ.தி.மு.க., எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ந்தேதியில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்திருக்கிறார். ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் இணைந்திருந்தார். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்று சொன்னாலும் கூட, இப்போது நாட்டு மக்களின் நலன் கருதி பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்திருக்கிறது.
கடந்த வாரம் பா.ம.க. தலைவர் அன்புமணி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்திருக்கிறார். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர், தமிழக முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே எங்கள் கூட்டணியில் இருக்கிறார்கள்.
இப்போது எங்கள் கூட்டணி மக்களின் நன்மை கருதி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது. இன்னும் சில கட்சிகள் வந்து சேரும். அதன் பிறகு சட்டமன்ற பொதுத் தேர்தலில் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையான வகையில் ஆட்சி அமைக்கும்.
கேள்வி: சசிகலா நடத்திய கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கப் போவதாக முடிவு செய்துள்ளார்கள். அவர்கள் ஆதரவு கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
பதில்: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் ஆதரவு தந்தாலும் அதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். நாட்டு மக்களின் நலன் கருதி யார் ஆதரவு தந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை.
கேள்வி: பிரதமர் மோடி வருகைக்கான ஏற்பாடுகள் எப்படி நடந்து கொண்டிருக்கிறது?
பதில்: பிரதமர் மோடி தமிழகத்துக்கு எத்தனை முறை வந்தாலும் இந்த முறை வருவது என்பது மிக மிக வித்தியாசமான ஒரு சூழ்நிலை. தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் பிரதமர் மோடி மீதும் மத்திய பா.ஜ.க. ஆட்சியின் மீதும் அக்கறை கொண்டு ஆதரவு தருகிறார்கள். பிரதமர் வருகையின்போது 5 லட்சம் பேருக்கும் மேல் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மதுராந்தகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. இணைந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த கூட்டம் மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும்.
கேள்வி: உங்கள் கூட்டணிக்கு டி.டி.வி. தினகரன் வருவாரா?
பதில்: அதுபற்றி நான் இப்போது எந்த கருத்தும் கூற முடியாது. 23-ந்தேதி மேடையில் யார், யார் இருக்கிறார்கள்? என்று நீங்கள் பார்க்கலாம்.
கேள்வி: பிரதமர் வந்த பிறகுதான் கூட்டணி முடிவாகுமா?
பதில்: பொறுத்திருந்து பாருங்கள். பா.ஜ.க. அகில இந்திய தலைவராக 45 வயது இளைஞர் பீகார் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அதுதான் பா.ஜ.க.வின் சுதந்திரம். அவர் செயல் தலைவராக இருக்கும் போதே திருவனந்தபுரத்தில் மேயர் பதவியை கைப்பற்றி இருக்கிறோம். மகாராஷ்டிரத்தில் 5 மாநகராட்சிகளை கைப்பற்றி இருக்கிறோம். அதன் பிறகு தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநில தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






