என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகத்தில் ஒருபோதும் பிரிவினைவாதத்திற்கு இடம் கிடையாது- அமைச்சர் சேகர்பாபு
    X

    தமிழகத்தில் ஒருபோதும் பிரிவினைவாதத்திற்கு இடம் கிடையாது- அமைச்சர் சேகர்பாபு

    • எந்த சக்தியாலும் முருகரிடமிருந்து எங்களை பிரிக்க முடியாது.
    • தி.மு.க.வை பொறுத்தளவில் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்.

    சென்னை:

    சென்னையில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பட்டியலை பொறுத்தளவில் அதிலுள்ள சிறு பிரச்சனைகளை களைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக நின்றார். அதாவது, வாக்களிக்கின்ற உரிமை இருக்கின்ற எவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் இருக்கக் கூடாது, வாக்களிக்க தகுதி இல்லாத யாரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கக் கூடாது என்பதுதான் தி.மு.க.வின் தாரக மந்திரமாகும்.

    இந்த தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு முன்பே தமிழ்நாடு முழுவதும் பாகம் வாரியாக முகவர்களை நியமித்த ஒரே இயக்கம் தி.மு.க. மட்டும்தான். எங்கள் முகவர்கள் களத்திற்கு சென்று வாக்களிக்கின்ற உரிமையுள்ள எவரையும் விடுபடாமல் பாதுகாப்போம். 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் இதே திருத்தப்படாத வாக்காளர் பட்டியலை கொண்டு தான் தேர்தலை சந்தித்து அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது. எதிர்கட்சி தலைவர், வார்த்தைகளை கொட்டுகின்ற போது அந்த வார்த்தைகளை தகுதியான கருத்துக்களை கூறுகின்றதா என்று ஆராய வேண்டும்.

    அவர்கள் ஆட்சியில் இருந்த போது இதே வாக்காளர் பட்டியலை வைத்துதானே ஆட்சிக்கு வந்தார்கள். இப்போது அவர் கூறுவதுபோல் போலி வாக்காளர்கள் தி.மு.க. பக்கம் இருந்திருந்தால் அவர்கள் எப்படி ஆட்சிக்கு வந்திருக்க முடியும். தான் திருடி பிறரை நம்பாள் என்ற பழமொழி இந்த கூற்றுக்கு உகந்ததாக இருக்கும்.

    திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம் போன்ற முருகன் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தியதோடு, 27 நாடுகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்தி காட்டி தமிழ் கடவுள் முருகப் பெருமானின் புகழுக்கு புகழ் சேர்த்த ஆட்சி இந்த ஆட்சியாகும். இது அனைத்தையும் முருகப் பெருமான் உணர்ந்து எங்கள் முதலமைச்சரோடு கை கோர்த்து கொண்டிருக்கிறார். எந்த சக்தியாலும் முருகரிடமிருந்து எங்களை பிரிக்க முடியாது.

    இனத்தால், மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்று நினைப்பவர்களை இந்தியாவின் இரும்பு மனிதன் என்ற போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் உறுதியும், நெஞ்சுரமும் கொண்ட திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் எந்த பிரிவினைவாதத்திற்கும் இடம் தர மாட்டார் என்பது சீமானுக்கு தெரியும். தி.மு.க.வை பொறுத்தளவில் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம் என்றார்.

    Next Story
    ×