என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் விவகாரம் - செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன்!
- நடிகர் விஜய் நாளை ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
- சம்மனை பெறவும், பதிலளிக்கவும் செந்தில்பாலாஜி மறுப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக இன்று நேரில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை. அவர் சிபிஐ சம்மனைப் பெறவோ அல்லது அதற்குப் பதிலளிக்கவோ மறுத்துவிட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் நடந்த துயரச் சம்பவத்திற்குச் செந்தில் பாலாஜியே காரணம் என்று ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மாநாட்டிற்குப் போதிய பாதுகாப்பு வழங்கக் கூடாது என்று காவல்துறையினருக்கு அவர் அழுத்தம் கொடுத்ததாகவும், சம்பவ இடத்தில் திட்டமிட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த செந்தில் பாலாஜி, போதிய திட்டமிடல் இல்லாததே நெரிசலுக்குக் காரணம் என்று தவெக நிர்வாகத்தைக் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே நடிகர் விஜய் நாளை ஆஜராகுமாறு சிபிஐ ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் தேர்தல் பணிகளால் நாளை ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்குமாறும், மேலும் விசாரணையை சென்னை சிபிஐ அலுவலகத்திற்கு மாற்றுமாறும் சிபிஐ தலைமைக்கு விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.






