என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முக்கிய பிரமுகர்கள் இணையும் ஈரோடு பிரசார கூட்டம்- புதிய அறிவிப்பை வெளியிடும் விஜய்
- இந்த பொதுக்கூட்டத்தில் விஜய் 30 நிமிடமாவது உரையாற்ற வேண்டும் என செங்கோட்டையன் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
- நாளை பிரசாரம் நடைபெற உள்ளதை ஒட்டி போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சுங்கச்சாவடி சரளையில் விஜயபுரி அம்மன் கோவில் திடலில் நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்துடன் இணைந்து செங்கோட்டையன் மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுக்கூட்டத்திற்கு இந்து சமய அறநிலைத்துறை, போலீஸ் சார்பில் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை த.வெ.க. நிர்வாகிகள் ஏற்றதை தொடர்ந்து போலீஸ் அனுமதி அளிக்கப்பட்டது.
இதற்காக விஜய் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து அங்கிருந்து கார் மூலம் நேரடியாக பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு வருகிறார். காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. விஜய் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பிரசார வாகனத்தின் மீது நின்று பேச உள்ளார். அந்த வாகனம் நிறுத்தப்படும் பகுதியை பொதுமக்கள் பார்க்கும் வகையில் மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து பகுதிகளிலும் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்பு வேலிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தடுப்பு வேலி பகுதியிலும் சுமார் 400 முதல் 500 பேர் வரை நிற்கும் வகையில் இடவசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
நடிகர் விஜய் முதல் முதலில் கட்சியை தொடங்கி விக்கிரவாண்டி அருகே முதல் மாநாட்டை நடத்தினார். அப்போது அவர் 46 நிமிடங்கள் பேசினார். அதைத்தொடர்ந்து ஆகஸ்டில் மதுரையில் நடந்த மாநாட்டில் விஜய் 35 நிமிடங்கள் பேசினார். கடந்த 9-ந்தேதி புதுவையில் மேற்கொண்ட பிரசாரத்தில் விஜய் 12 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் விஜய் 30 நிமிடமாவது உரையாற்ற வேண்டும் என செங்கோட்டையன் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விஜய் பிரசாரத்தை ஒட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் கூடு தல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை பிரசாரம் நடைபெற உள்ளதை ஒட்டி போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்பு துறை வாகனங்கள். ஆம்புலன்ஸ்கள், மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். கரூர் சம்பவத்துக்கு பிறகு தமிழகத்தில் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் என்பதால் விஜயின் பேச்சு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கோட்டையன் இணைந்த பிறகு முதல் முதலில் நடைபெறும் கூட்டம் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விஜய் பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிற கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், முன்னாள் அமைச்சர்கள் சிலர் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை செங்கோட்டையன் மிகவும் ரகசியமாக வைத்துள்ளதாக தெரிகிறது.
மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் விஜய் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.






