என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    த.வெ.க. சார்பில் கல்வி விருது வழங்கும் விழா... வழிபாடு நடத்தி தொடங்கி வைத்த புஸ்ஸி ஆனந்த்!
    X

    த.வெ.க. சார்பில் கல்வி விருது வழங்கும் விழா... வழிபாடு நடத்தி தொடங்கி வைத்த புஸ்ஸி ஆனந்த்!

    • விழாவில் சுமார் 2000 பேர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
    • விழா அரங்கிற்குள் செல்போன், பேப்பர், பேனா மற்றும் இதர பொருட்கள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாணவ, மாணவிகளின் கல்வி ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.

    விஜய்யின் இந்த திட்டம் மாணவ, மாணவிகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டி வருகிறது. விஜய் கையினால் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவ, மாணவிகள் பலர் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் 2025-ம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா இன்று காலை முதல் மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டலில் நடக்கிறது. பரிசளிப்பு விழாவில் சென்னை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, திண்டுக்கல், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை பெரம்பலூர், வேலூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட 88 தொகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் 600 பேர் பங்கேற்கின்றனர்.

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளும், மாநில அளவில் முதலிடத்தை பெற்ற மாணவ, மாணவிகளும் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளிகள், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மாணவ, மாணவிகளும் தங்களது பெற்றோருடன் பங்கேற்க இருக்கின்றனர். விழாவில் சுமார் 2000 பேர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    விழாவுக்கு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. விழா அரங்கிற்குள் செல்போன், பேப்பர், பேனா மற்றும் இதர பொருட்கள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், மூன்று கட்டமாக நடைபெற உள்ள இந்த கல்வி விருது வழங்கும் விழாவில் இன்று முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதனால் இந்த விழாவில் பங்கேற்க அதிகாலை முதலே விழா நடைபெறும் ஓட்டல் முன்பாக மாணவர்கள் குவிந்து வருகின்றனர்.

    இதனிடையே, விழா தொடங்குவதற்கு முன்பாக ஓட்டல் முன்பு உள்ள விநாயகர் சிலைக்கு பூஜை நடத்தி தேங்காய் உடைத்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சிறப்பு வழிபாடு செய்தார். இதனை தொடர்ந்து விழாவுக்கு மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

    Next Story
    ×