என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில்தான் குழப்பம்: எடப்பாடி பழனிசாமி
- தேர்தலில் நாம் எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும் என்பதை பற்றி கலந்து ஆலோசித்தோம்.
- எங்கள் கூட்டணி சுமுகமாக இருக்கிறது.
சென்னை:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தீவிரமாக தயாராகி வருகிறது. இது தொடர்பாகவும் தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சு நடத்துவதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலையில் டெல்லி புறப்பட்டு சென்றார்.
மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது பற்றி விவாதித்தார்.
இன்று காலையில் டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி வருமாறு:-
மத்திய மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழக தேர்தல் நிலவரம் பற்றி கலந்து பேசினோம். தேர்தலில் நாம் எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும் என்பதை பற்றி கலந்து ஆலோசித்தோம்.
கேள்வி: கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதா? புதிய கட்சிகள் ஏதாவது அ.தி.மு.க. கூட்டணிக்கு வர இருக்கிறதா?
பதில்: சில கட்சிகளுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம். வருவதற்கு வாய்ப்பு உண்டு.
கேள்வி: சசிகலா ஏற்கெனவே அ.தி.மு.க.வில் இருந்தவர். அவருடைய கட்சி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளதா? நேற்று நடந்த கூட்டத்தில் இதைப்பற்றி பேசியதாக சொல்லப்படுகிறதே?
பதில்: அதைப்பற்றி பேசவில்லை. இதை விடுங்கள். நீங்களாக காது, மூக்கு வைத்து பேச வேண்டாம்.
கேள்வி : தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா?
பதில்: விரைவாக ஆரம்பிக்கப்படும். தேர்தல் இன்னும் அறிவிக்கவில்லையே.
கேள்வி: தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் தொகுதிப் பங்கீடு நடைபெறும் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறாரே?
பதில்: தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எங்கள் கூட்டணி சுமுகமாக இருக்கிறது. எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு குழப்பம் இருப்பதை பத்திரிகை, ஊடகங்களிலும் வரும் செய்தியை வைத்து கணிக்க முடிகிறது.
அந்த கூட்டணியில்தான் பிரச்சனை இருக்கிறதே ஒழிய, அ.தி.மு.க. – தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒன்றாக இருந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வருகின்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






