என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பிரமாண்ட ரோடு ஷோ- தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை பயணம்
    X

    பிரமாண்ட ரோடு ஷோ- தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை பயணம்

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு-ஷோக்கள் மூலம் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.
    • புது ஜெயில் ரோடு, மதுரா கோட்ஸ் வழியாக நடந்தும், வாகனத்தில் சென்றும் பொதுமக்களை சந்திக்கிறார்.

    2026 சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் வகையிலான களப்பணிகளில் முன்வரிசையில் நின்று தீவிரம் காட்டி வருகிறது.

    தமிழக அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடையும் நோக்கில் கள ஆய்வு செய்யும் வகையில் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு-ஷோக்கள் மூலம் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.

    அந்த வகையில் நாளை (31-ந்தேதி) மதுரையில் பிரமாண்ட ரோடு-ஷோ நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத வண்ணம் மாநகர பகுதியில் சுமார் 25 கி.மீ. தூரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு-ஷோ நடத்துகிறார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 1 லட்சம் பேரை பங்கேற்க செய்வதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் பி.மூர்த்தி செய்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (ஜூன் 1-ந்தேதி) மதுரை உத்தங்குடி பகுதியில் நடக்கும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளிட உள்ளார்.

    இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகிறார்.

    விமான நிலையத்தில் மதுரை வடக்கு, மதுரை மாநகர் மற்றும் மதுரை தெற்கு ஆகிய ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் மாலையில் 25 கி.மீ. தூரத்திற்கு நடைபெறும் பிரமாண்ட ரோடு ஷோவில் அவர் பங்கேற்கிறார். முதலாவதாக அவனியாபுரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு ரோடு-ஷோவை தொடங்குகிறார்.

    அங்கிருந்து ஜீவா நகர், ஜெய்ஹிந்த்புரம் வழியாக பழங்காநத்தம் பகுதியை சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து பை-பாஸ் ரோடு வழியாக காளவாசல், குரு தியேட்டர் பகுதிக்கு வந்து அங்கிருந்து ஆரப்பாளையம் கிராசில் அமைந்துள்ள திருமலை நாயக்கர் சிலை வரை ரோடு-ஷோ நிகழ்ச்சி நடக்கிறது.

    இதைத் தொடர்ந்து புது ஜெயில் ரோடு, மதுரா கோட்ஸ் வழியாக நடந்தும், வாகனத்தில் சென்றும் பொதுமக்களை சந்திக்கிறார்.

    அப்போது புது ஜெயில் ரோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மதுரை மாநகராட்சியின் முதல் மேயருமான முத்துப்பிள்ளை சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    இந்த பிரமாண்ட ரோடு-ஷோ நிகழ்ச்சியில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க.வைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்கிறார்கள்.

    குறிப்பாக இதில் அதிக அளவில் பெண்களை பங்கேற்க செய்யும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் முதலமைச்சரின் இந்த ரோடு-ஷோ திருப்பரங்குன்றம், மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய 3 தொகுதிகளை இணைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    Next Story
    ×