என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காங்கிரசுக்கு 60 தொகுதி தராவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்- மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி
- 4-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ள கட்சி பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்துவது தொடர்பாக ஆலோசித்தனர்.
- ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தரும் அணியில் சேர வேண்டும்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சத்திய மூர்த்தி பவனில் நேற்று மாலையில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலை வகித்தார். சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., கிராம கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அல்போன்ஸ் உள்பட மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தேசம் காப்போம் நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் நடத்துவது, காங்கிரஸ் மைதானத்தில் 4-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ள கட்சி பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்துவது தொடர்பாக ஆலோசித்தனர்.
கூட்டத்தில் கட்சி பிரச்சனைகளையும் மாவட்ட தலைவர்கள் கிளப்பினார்கள். பெரம்பலூர் மாவட்ட தலைவர் சுரேஷ் பேசும் போது, கட்சி அமைப்பு ரீதியாக நமக்கு 72 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்துக்கு ஒரு தொகுதியிலாவது காங்கிரஸ் போட்டியிட வேண்டாமா? தி.மு.க. கூட்டணியில் குறைந்த பட்சம் 60 தொகுதிகளையாவது கேட்டு பெற வேண்டும். இல்லை என்றால் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தரும் அணியில் சேர வேண்டும்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று கேட்க கூட கட்சியினருக்கு உரிமை இல்லையா? அதற்காக கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பது தவறு என்றார்.
இதே போல் மேலும் சில மாவட்ட தலைவர்களும் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசும் போது, ஆளும் கட்சி கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்சனைகளை எடுத்துக் கூற வேண்டும். ஆட்சியின் தவறுகளையும் சுட்டிக் காட்ட வேண்டும். வரும் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்றார்.
பீட்டர் அல்போன்ஸ் பேசும் போது, எம்.எல்.ஏ. பதவி மீது அனைவருக்கும் ஆசை இருக்கலாம். அதற்கு நேரம் வரும் போது பேசிக் கொள்ளலாம். இப்போது கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும். கிராம கமிட்டிகள் அமைப்பதில் சென்னையில் இன்னும் 2 மாவட்ட தலைவர்கள் பட்டியல் தரவில்லை என்றார்.
இதற்கு மாவட்ட தலைவர் திரவியம் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார். மற்றொரு மாவட்ட தலைவர் சிவராஜசேகர் மேலிட பொறுப்பாளர் நியமிக்கப்பட்ட பிறகு இதுவரை அவரது முன்னிலையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இறுதியாக மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேசும் போது, என் அலுவலக கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. கட்சியினர் தங்கள் பிரச்சனைகளை என்னிடம் நேரிலேயே தெரிவிக்கலாம் என்றார்.






