என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டெல்டா பாசனம்: வரும் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- சேலம் மத்திய மாவட்ட செயலாளர் அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- மேட்டூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களையும், கட்சியினரையும் சந்திக்கிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து அரசின் திட்டங்களை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
அதேபோல் சேலம் மாவட்டத்திலும் வருகிற 12ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11-ந் தேதி சேலம் வருகிறார்.
இதற்காக சேலம் இரும்பாலை ரோட்டில் உள்ள அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை இன்று சேலம் மத்திய மாவட்ட செயலாளர் அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர்அமைச்சர் ராஜேந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மேட்டூர் அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக வருகிற 11-ந் தேதி சேலம் வருகிறார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் கட்சியினர் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் மேட்டூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களையும், கட்சியினரையும் சந்திக்கிறார். தொடர்ந்து இரவு மேட்டூரில் தங்குகிறார்.
தொடர்ந்து மறுநாள் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று 1 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1200 கோடி மதிப்பிலான நல உதவிகளை வழங்கி பேசுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கலெக்டர் பிருந்தாதேவி, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார், கூடுதல் கலெக்டர் பொன்மணி, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், போலீஸ் துணை கமிஷனர் வேல்முருகன், டீன் தேவிமீனாள் மற்றும் அரசு அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.






