என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மக்கள் நல அரசியல்வாதியாக விஜய் மாற வேண்டும்: பா.ஜ.க. வேண்டுகோள்
- முதிர்ச்சியற்ற வகையில், மிஷனரி வார் ரூம் எழுதிக் கொடுத்த வசனத்தை ஏகத்தாளமாக பேசும் போக்கு கண்டிக்கத்தக்கது.
- வாக்கு வங்கி அரசியலுக்காக நீங்கள் நடத்தும் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
சென்னை:
தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடிகர் விஜய் போன்ற இளைய தலைமுறையினர், மக்களிடம் செல்வாக்கு பெற்ற நடிகர்கள், அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. அந்த அடிப்படையில் நடிகர் விஜய் அவர்களை பா.ஜ.க. வரவேற்றது.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து ஒன்றரை வருடத்தில் திடீர் முதல்வராக கற்பனை செய்து கொண்டு அரசியல் தராதரம் இல்லாமல், முதிர்ச்சியற்ற வகையில், மிஷனரி வார் ரூம் எழுதிக் கொடுத்த வசனத்தை ஏகத்தாளமாக பேசும் போக்கு கண்டிக்கத்தக்கது.
அண்ணா, எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை பாராட்டுவதாலும், கொள்கை தலைவர்கள் என்று சாதிக்கு ஒரு தலைவர்களாக தமிழகத்திற்கு தியாகங்கள் செய்த தலைவர்கள் படத்தையும் போட்டு, அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றையும், வீரத்தையும், தியாகத்தையும் படிக்காமல், மக்களின் பிரச்சனைகளையும் புரிந்து கொள்ள முயற்சிக்காமல் வாக்கு வங்கி அரசியலுக்காக நீங்கள் நடத்தும் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
இனியாவது வருகின்ற காலங்களில் விளம்பர அரசியலுக்காக, உலக அரசியலுக்கே வழிகாட்டி மேகமாக விளங்கும் பாரதிய ஜனதா கட்சியையும், உலகத்தின் தலைசிறந்த மக்கள் நலம் சார்ந்த தொண்டு நிறுவனங்களின் முதன்மை அமைப்பாக விளங்கும் புனிதமான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும் விமர்சித்து வெளிநாட்டு மிஷனரிகளை திருப்தி செய்து வருமான அரசியலுக்காக நாடகம் நடத்துவதை விட்டுவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தையும், அதை நம்பி வந்த லட்சக்கணக்கான இளைஞர்களையும் நல்வழிப் பாதையில் செயல்பட மக்கள் நல அரசியல்வாதியாக மாற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.






