என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் தந்தை ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி
- கடந்த சில தினங்களுக்கு முன்பு எந்த கூட்டணி வண்டியில் ஏறுவோம் என்பதை அறிவிப்பேன் என்று ராமதாஸ் கூறியிருந்தார்.
- த.வெ.க.வுடன் சேர எடுத்த முயற்சியும் பலனற்று போனது.
சென்னை:
சட்டமன்ற தேர்தலை சந்திக்க பெரும்பாலான முன்னணி கட்சிகள் ஒவ்வொரு அணியில் சென்று இடம் பிடித்து விட்டன. ஆனால் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. எந்த பக்கம் செல்வது என்று தெரியாத நிலையில் உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு எந்த கூட்டணி வண்டியில் ஏறுவோம் என்பதை அறிவிப்பேன் என்று ராமதாஸ் கூறியிருந்தார். ஆனால் எதையும் அறிவிக்கவில்லை.
தி.மு.க.வுடன் சேரலாம் என்று முயற்சித்தபோது விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு தெரிவித்து குறுக்கே வந்ததால் அந்த முயற்சி தடைப்பட்டது. த.வெ.க. பக்கம் போகலாம் என்று முயற்சித்தபோது விஜய் பக்கம் தலித் வாக்காளர்கள் அதிகமாக இருப்பதாகவும் டாக்டர் ராமதாஸ் வந்தால் சரிப்பட்டு வராது என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் த.வெ.க.வுடன் சேர எடுத்த முயற்சியும் பலனற்று போனது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் டாக்டர் அன்புமணி இருப்பதால் அந்த கூட்டணிக்கு செல்ல தயங்கிய ராமதாஸ் வேறு வழியில்லாமல் இப்போது மீண்டும் அந்த கூட்டணியில் சேர முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
அவ்வாறு சேரும்பட்சத்தில் தான் விதிக்கும் 3 நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று அன்புமணி எடப்பாடி பழனிசாமியிடம் கண்டிப்புடன் கூறி விட்டாராம்.
அதாவது மாம்பழம் சின்னத்தை ராமதாசுக்கு கொடுக்க மாட்டோம். அவர் எந்த சின்னத்திலும் நிற்கட்டும்.
அதே மாதிரி எங்களுக்கான தொகுதிகள் எது என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். எங்களுடன் டீல் முடிந்த பிறகே அவருக்கான தொகுதிகளை ஒதுக்க வேண்டும்.
முக்கியமாக தேர்தல் பிரசாரத்தில் எப்பவுமே ராமதாஸ் இருக்கும் மேடையில் நான் ஏற மாட்டேன். கூட்டணி பிரசாரம் என்று என்னை கட்டாயப்படுத்தி அழைக்க கூடாது ஆகிய நிபந்தனைகளை விதித்து உள்ளாராம்.
இதனால் அங்கும் டாக் டர் ராமதாஸ் செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த நிலையில் எந்த பக்கம் செல்வது? என்ன முடிவு செய்வது? என்பது பற்றி ஆலோசிப்பதற்காக டாக்டர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, அருள் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.






