என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுவை புகட்டுவதில் தி.மு.க. அரசு சாதனை- அன்புமணி கண்டனம்
- நடப்பாண்டில் நாளை வரையிலான 4 நாள்களில் மது வணிகம் ரூ.900 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
- மக்கள் விரோத மது ஆதரவு அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் போகிப் பண்டிகை நாளில் ரூ.217 கோடிக்கும், பொங்கல் நாளில் ரூ.301 கோடிக்கும் மது விற்பனையாகியிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் ரூ.454 கோடிக்கு மது விற்பனையாகி இருந்த நிலையில், நடப்பாண்டில் அதை விட 14.10 சதவீதம் அதிகம் ஆகும். தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் 11.19 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியடைந்த நிலையில், அதை விட அதிகமாக மது வணிகம் வளர்ச்சியடைந்திருக்கிறது. மக்களுக்கு மதுவைப் புகட்டுவதில் மட்டும் தான் தி.மு.க. அரசு சாதனை படைக்கிறது.
கடந்த ஆண்டு பொங்கல் திருநாளின்போது 4 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையான நிலையில், நடப்பாண்டில் நாளை வரையிலான 4 நாள்களில் மது வணிகம் ரூ.900 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
பொங்கல் திருநாள் மது வணிகத்தில் அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், மனமகிழ் மன்றங்களின் மூலம் ரூ.82.59 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது என்பது தான். இது மதுக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்ட ரூ.435.41 கோடி மதுவுடன் ஒப்பிடும்போது 19 சதவீதம் ஆகும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில் 500 மதுக்கடைகளை, அதாவது 9 சதவீதம் மதுக்கடைகளை மூடிய தி.மு.க. அரசு, 19 சதவீதம் கூடுதலாக மது வணிகம் செய்யும் அளவுக்கு மனமகிழ் மன்றங்களைத் திறந்து மதுவை விற்பனை செய்திருப்பது உறுதியாகி யிருக்கிறது.
மக்கள் விரோத மது ஆதரவு அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






