என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    TVK Vijay | சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து விஜய் வெளியே வந்த வீடியோவை பகிர்ந்த ஆதவ் அர்ஜுனா
    X

    TVK Vijay | சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து விஜய் வெளியே வந்த வீடியோவை பகிர்ந்த ஆதவ் அர்ஜுனா

    • கரூர் நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் பலியானார்கள்.
    • நேற்று டெல்லியில் சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு விஜய் விசாரணைக்கு ஆஜரானார்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி தமிழக வெற்றிக்கழக தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி தலைவர் விஜய் பங்கேற்று பேசினார்.

    பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் விஜய் பஸ்சில் நின்றபடி பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் பலியானார்கள்.

    நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவத்துக்கு காரணம் பாதுகாப்பு குறைபாடுகள் என்று தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் சொல்லப்பட்டதால் போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

    அதன்பிறகு 2-வது முறையாக ஜனவரி 19-ந்தேதி விஜய் மீண்டும் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்நிலையில், நேற்று டெல்லியில் சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு விஜய் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். விசாரணை முடிந்து மாலை சிபிஐ அலுவலகத்தில் இருந்து விஜய் வெளியேறிய வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "டெல்லியில் தொடங்கிய பிரச்சாரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடையும் நாள் நெருங்கிவிட்டது.

    அதிகாரத்தால் நம்மை முடக்க நினைத்தார்கள், அவதூறுகளால் நம்மை அழிக்க நினைத்தார்கள். ஆனால் மக்கள் ஆதரவு எனும் மகத்தான சக்தி முன் இவை அனைத்தும் தோற்றுப் போனது. இனி நம்மை முடக்க நினைத்த அதே சாலைகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் முழக்கம் ஓங்கி ஒலிக்கும். எந்த மக்களிடையே நம் மீது வெறுப்பை பரப்ப அதிகார வர்க்கம் முயன்றதோ அதே மக்களின் ஆதரவோடு இனி ஒவ்வொரு ஊரிலும் நம் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழும்.

    இனி விசில் சத்தம் வீதிகளெங்கும் ஒலிக்கட்டும். மாற்றத்திற்கான மக்களின் கனவு பலிக்கட்டும். எளியவர்களுக்கான மக்களாட்சி மலரட்டும்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×