என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆள்கடத்தல் வழக்கில் ஏடிஜிபி கைது: கட்டுப்பாட்டில் இல்லாத காவல்துறை- என்ன செய்கிறார் முதலமைச்சர்?
- சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பூவை ஜெகன் மூர்த்தியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச் சேர்ந்தவர் வனராஜ். இவரது மகள் விஜயஸ்ரீ (வயது 21). இவரும் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்துள்ள தனுஷ் (24) என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு விஜயஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் விஜயஸ்ரீ வீட்டை விட்டு வெளியேறி தனுசை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து வனராஜ் தனது மகளை மீட்டுத் தரும்படி மதுரையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி என்பவரை அணுகினார். அவர் மூலமாக கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி உதவியை நாடியதாக தெரிகிறது.
பின்னர் கூடுதல் டி.ஜி.பி. ஒருவர் காரில் தனுசின் தம்பியான 17 வயது சிறுவன் கடத்தப்பட்டு மீண்டும் பின்னர் அவர் வீட்டின் அருகே விடப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயம், திருவாலங்காடு காவல்நிலையத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு விசாரணைக்காக பூவை ஜெகன் மூர்த்தி ஆஜராகினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி கட்டப்பஞ்சாயத்து செய்து காதல் ஜோடியை பிரிக்க முயன்றார் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
அதிமுக கூட்டணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்தி கட்டப்பஞ்சாயத்து செய்தாரா இல்லையா? என்றே விவாதங்கள் கட்டமைக்கப்படுகிறதே தவிர, முதலமைச்சரின் கீழ் வரக்கூடிய உள்துறையில் இயங்கும் முக்கியமான ஒரு காவல்துறை அதிகாரி 'ஆள் கடத்தலில்' ஈடுபட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்ற செய்தி விவாத பொருளாகவே மாறவில்லை.
பொதுமக்களை காக்க வேண்டிய உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரி ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது காவல்துறையை தன கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரின் பெயருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கம் இல்லையா?
தமிழகத்தில் தினம் தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. கொங்கு மாவட்டங்களில் வயதானவர்கள் குறிவைத்து கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. சமூக ஆர்வலர் ஜபகர் அலி, முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் ஆகியோர் கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரும்பு கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவார் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், காவல்துறையே அவர் கட்டுப்பாட்டில் தான் உள்ளதா என்று கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கை தன் கையில் எடுத்து கொண்டு ஆள் கடத்தலுக்கு போலீஸ் வாகனத்தை பயன்படுத்தும் தைரியம் ஏ.டி.ஜி.பி. ஜெயராமிற்கு எப்படி வந்தது. ஒருவேளை காவல்துறையினரின் இத்தகைய அத்துமீறல் யாருக்கும் தெரிவதில்லையா? இல்லை காவல்துறை உயரதிகாரிகள் இதனை கண்டுகொள்வதில்லையா?
காவல்துறையினரின் இந்த அத்துமீறல் நீதிமன்றத்திற்கு தெரிகிறது, ஆனால் முதலமைச்சருக்கு தெரியவில்லையா? இல்லை அவருக்கு யாரும் தெரியப்படுத்துவது இல்லையா? உண்மையிலேயே முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் தான் காவல்துறை உள்ளதா? என்று நிறைய கேள்விகள் எழுகின்றன.
பொதுமக்களின் மனதில் எழும் இந்த கேள்விகளை எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைப் போல கடந்து செல்லாமல் முதலமைச்சர் கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.






