என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

41 பேர் பலியான சம்பவம்: சி.பி.ஐ. சிறப்பு அதிகாரி விரைவில் கரூர் வருகிறார்
- நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்து விட்டு கரூருக்கு விஜய் சென்ற வழித்தடத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
- கரூர் நெரிசல் விவகாரத்தில் விஜய் பிரசாரத்துக்கு தாமதமாக வந்ததே காரணம் என்று போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் ஆலோசனை நடத்தி சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க உள்ளனர். போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் நியமிக்கப்படும் அந்த அதிகாரிக்கு கீழ் செயல்படுவதற்கு டி.எஸ்.பி. இன்ஸ் பெக்டர்கள் அடங்கிய குழுவும் அமைக்கப்படுகிறது.
விசாரணை அதிகாரி புதிதாக நியமிக்கப்பட்டதும் உடனடியாக அவர் விசாரணையை தொடங்குகிறார்.
தமிழகத்தில் ஏற்கனவே சி.பி.ஐ. அதிகாரிகள் குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவில் இருந்தே சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சி.பி.ஐ. இயக்குனர்தான் யாரை அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார் என்பதால் வேறு மாநிலங்களை சேர்ந்த வரும் சி.பி.ஐ. அதிகாரியாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறப்பு அதிகாரி இன்று அல்லது நாளை நியமிக்கப்பட உள்ளார். இதன் பிறகு புதிய அதிகாரி கரூருக்கு சென்று தனது விசாரணையை தொடங்குகிறார்.
கரூரில் 41 பேர் பலியான இடமான வேலுச்சாமிபுரத்துக்கு சென்று ஆய்வு செய்ய உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் குழு 41 பேர் பலியானது தொடர்பாக அதிரடி விசாரணையை நடத்துகிறார்கள்.
கரூர் சம்பவத்தின்போது உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களிடமும் தகவல்களை சேகரிக்க முடிவு செய்துள்ள அதிகாரிகள் நெரிசலில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து நடந்த சம்பவம் பற்றி விரிவாக கேட்டறிகிறார்கள்.
நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்து விட்டு கரூருக்கு விஜய் சென்ற வழித்தடத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி ஏற்பட்ட நெரிசல் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனும் விசாரணை நடத்தி வந்தார்.
இந்த 2 விசாரணையும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இதுவரை நடத்திய விசாரணை விவரங்கள் அனைத்தையும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினரும் நீதிபதி அருணா ஜெகதீசனும் தாங்கள் நடத்திய விசாரணை தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒப்படைத்ததும் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை வேகப்படுத்த உள்ளனர்.
ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் சம்பவம் நடந்த மறுநாள் கரூர் வந்தார். பின்னர் 2 நாட்கள் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரிடம் நேரில் விசாரணை நடத்தினார். பின்னர் சென்னை புறப்பட்டு சென்றார்.
ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்து ஆம்புலன்ஸ் டிரைவர்கள், சம்ப வத்தை நேரில் பார்த்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் என 100-க்கும் மேற்பட்டோ ரிடம் விசாரணை நடத்தினர். டிரோன் கேமரா காட்சிகள், சி.சி.டி.வி. பதிவுகள் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்த ஆவணங்கள் அனைத்தும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது.
கரூர் நெரிசல் விவகாரத்தில் விஜய் பிரசாரத்துக்கு தாமதமாக வந்ததே காரணம் என்று போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விஜய் தரப்பிலோ, போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்காமல் தடியடி நடத்தியதே நெரிசலுக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விஜய் பிரசார கூட்டத்துக்குள் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாகவும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். இப்படி பல்வேறு தரப்பில் இருந்தும் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் அது தொடர்பாக எழுந்துள்ள சந்தேக கேள்விகளுக்கும் விடை காண வேண்டிய கட்டாயத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடங்க உள்ள விசாரணை பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.






