என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி - மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
- உலகில் வேறு எந்த கடற்கரையிலும் இந்த அளவிற்கு கடைகள் இல்லை.
- உணவு பொருட்கள், பொம்மை, பேன்சி பொருட்கள் விற்கும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி
மெரினா கடற்கரையில், கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு விசாரித்து வருகிறது.
ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் பேசிய நீதிபதிகள், "உலகில் வேறு எந்த கடற்கரையிலும் இந்த அளவிற்கு கடைகள் இல்லை. உணவு பொருட்கள், பொம்மை, பேன்சி பொருட்கள் விற்கும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மற்ற கடைகள் தேவையில்லை. கடற்கரை மக்கள் ரசிக்கத் தானே தவிர, ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது எனவும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடற்கரையை ரசிக்க கடைகள் இடையூறாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.
கடைகளின் எண்ணிக்கையை குறைத்து புதிய திட்டத்தை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, "மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தலா 100 உணவகம், பொம்மை மற்றும் பேன்சி கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள கடைகளை அகற்றிவிட்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து குலுக்கல் முறையில் கடைகளை ஒதுக்கீடு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






