search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ளத்தால் 515 குளங்களில் 720 இடங்களில் உடைப்பு- சீரமைக்கும் பணியை நாளைக்குள் முடிக்க திட்டம்
    X

    வெள்ளத்தால் 515 குளங்களில் 720 இடங்களில் உடைப்பு- சீரமைக்கும் பணியை நாளைக்குள் முடிக்க திட்டம்

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டனர்.
    • காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக காட்சி அளித்தது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத கன மழையால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 1½ லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் சென்றது.

    இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள், ஏரிகள், கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் பல்வேறு குளங்க ளில் உடைப்பும் ஏற்பட்டது.

    தூத்துக்குடி, கோரம் பள்ளம் உடைந்ததால் மாநகரில் உள்ள ஆயிரக் கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதே போல் இரு மாவட்டங்களில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக காட்சி அளித்தது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 515 பாசன குளங்களில் 720-க்கும் மேற்பட்ட இடங்களில் மதகுகள் உடைந்து சேதம் அடைந்தது.

    இதைத்தொடர்ந்து சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கியது. தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தினர்.

    மீட்பு பணிகளுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டனர்.

    எம்.சி. அடி கொள்ளளவு கொண்ட கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்ட தால் 4 டி.எம்.சி. தண்ணீர் பாயந்தோடியது. வழக்கமாக குளத்தில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படும் நிலை யில் 46 ஆயிரம் கன தண்ணீர் அங்கிருந்து சென்றது.

    இதனைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட நீர்வளத்துறை என்ஜினீயர்கள் இந்த மாவட்டங்களில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இரண்டு மாவட்டங்களிலும் உடைப்பு ஏற்பட்ட 720 பகுதிகளில் மதகுகளை சீரமைக்கும் பணிகளில் தலைமை பொறியாளர்கள் பிரிவில் உள்ள 3 மூத்த அதிகாரிகள் தலைமையில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    அவர்கள் தலைமையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் எந்திரங்களை கொண்டு சீரமைப்பு பணிகளை இரவு- பகலாக நடத்தி வருகிறார்கள். பெரும்பாலான பணிகள் முடிந்து விட்ட நிலையில் அனைத்து பணிகளையும் நாளைக்குள் (வெள்ளிக் கிழமை) முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இதுகுறித்து நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்தையா கூறியதாவது:-

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சராசரி மழை அளவு 650 மில்லி மீட்டர். ஆனால் டிசம்பர் 15-ந்தேதிக்குள் ஆண்டு மழையில் 75 சதவீதம் பெய்துள்ளது.

    டிசம்பர் 17-ந்தேதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மிக அதிகளவு கனமழை பெய்தது.

    இந்த மாவட்டத்தில் சராசரியாக 36 சென்டி மீட்டர் பதிவானது. 100 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இந்த மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் 1½ லட்சம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    தாமிரபரணியில் காட்டாற்று வெள்ளம் கீழ்நோக்கி பாய்வதற்கு பதிலாக பக்கவாட்டாகவும், இருபுறமும் கரைபுரண்டு ஓடியது. கரைக்கு அப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வழக்கமாக ஆற்றில் மழை நீர் வடிந்து செல்வதை தடுத்து ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மொத்தமுள்ள 3 ஆயிரம் குளங்களில் 3-ல் ஒரு பங்கு குளங்கள் மட்டுமே 17-ந்தேதிக்கு முன்பு நிரம்பி இருந்தது. ஆனால் பெரு வெள்ளத்திற்கு பின்னரே அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்பின.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் அதிக நீர் இருப்ப தால் குளங்களின் உடைப்புகளை சீரமைத்த பிறகு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×