search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வாலிபர் உடல் ஏரிக்கரையில் மீட்பு- தொடர் விசாரணை
    X

    தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வாலிபர் உடல் ஏரிக்கரையில் மீட்பு- தொடர் விசாரணை

    • கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று விசாரணை நடத்தினர்.
    • மணிகண்டன் என்ற மாற்று திறனாளி கொலை வழக்கிலும் குண்டர் சட்டத்தில் கைதானது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு ரோட்டில் விநாயகர் கோவில் உள்ளது.

    நேற்றிரவு 8 மணியளவில் இந்த பகுதியில் வாலிபர் ஒருவரின் தலை ஒன்று தனியாக துண்டிக்கப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் வீசப்பட்டு கிடந்தது. இருட்டான பகுதி என்பதால் சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு சென்றபோது தலை கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுபற்றி தெரிய வந்ததும் அந்த பகுதியில் வந்து சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன், வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கிடந்த வாலிபருக்கு 35 வயது இருக்கும் என தெரிய வந்தது. மேலும் துண்டிக்கப்பட்டு கிடந்த தலையில் இருந்து ரத்தம் வடிந்ததால் கொலை நடந்து சில மணி நேரமே ஆவது தெரியவந்தது. எனவே உடல் இந்த பகுதியில் தான் எங்காவது வீசி இருக்கலாம் என்று போலீசார் கருதினர். தொடர்ந்து அந்த வாலிபரின் தலையை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் குள்ளம்பட்டி, அக்ரஹாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாலிபரின் உடலை தேடினர். இன்று அதிகாலை அக்ரஹாரம் ஏரி கரையில் வாலிபரின் உடலை போலீசார் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்ய ப்பட்ட நபர் குள்ளம்பட்டி, வலசையூர், காட்டூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம்? என்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் கொலையாளியை தேடினர். அப்போது அங்குள்ள வேகத்தடை அருகே போலீசார் சார்பில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் காரிப்பட்டியை அடுத்த கள்ளிக்காடு பகுதியை சேர்ந்த திருமலை (32) என்பவர் ரோட்டில் கிடந்த வாலிபரின் தலையை அங்கு வீசி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்ததால் உளறியபடியே இருந்தார். இதையடுத்து போலீசார் இன்று காலை அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். மேலும் சம்பவம் குறித்து அந்த பகுதியில் நேற்றிரவு போலீசார் விசாரணை நடத்திய போது பரபரப்பு தகவல்கள் வெளியானது, அதன் விவரம் வருமாறு-

    கொலை செய்யப்பட்ட நபர் அங்குள்ள மதுக்கடையில் மது வாங்கிய போது திருமலைக்கும், கொலை செய்யப்பட்ட வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், அப்போது அந்த நபர் திருமலையை தாக்கியதாகவும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் திருமலை வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து கழுத்தை அறுத்து அந்த வாலிபரை கொலை செய்து தலையை அங்கு வீசி சென்றதும் தெரியவந்தது.

    மேலும் போலீசாரிடம் சிக்கியுள்ள திருமலை வாழப்பாடியை சேர்ந்த ஒருவரை கொலை செய்துள்ளார். மேலும் அந்த பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற மாற்று திறனாளி கொலை வழக்கிலும் குண்டர் சட்டத்தில் கைதானது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×