search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நந்தனம் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி- சென்னையில் குவியும் பா.ஜனதா தொண்டர்கள்
    X

    நந்தனம் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி- சென்னையில் குவியும் பா.ஜனதா தொண்டர்கள்

    • ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
    • ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாரதிய ஜனதா தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டது.

    3-வது முறையாக பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில் தமிழகத்தில் இந்த முறை எப்படியாவது சில தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பணிக்கான வியூகங்களை வகுத்துள்ளார்கள்.

    இதன்படி பிரதமர் மோடி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

    கடந்த 2 மாதங்களில் மோடி 4 முறை தமிழகம் வந்துள்ளார். திருச்சி, பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்களில் பேசி இருக்கிறார்.

    கடந்த 27 மற்றும் 28-ந்தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அடுத்த 5 நாளில் மீண்டும் இன்று தமிழகம் வருகிறார்.

    தமிழக பாரதிய ஜனதா சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.


    மீண்டும் மோடி சர்க்கார் என்ற வாசகத்துடன் மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையின் ஒரு புறத்தில் பிரதமர் மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் செங்கோலை கொண்டு நிறுவிய படம் இடம் பெற்றுள்ளது. மறுபுறத்தில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை மூதாட்டி ஒருவரிடம் ஆசி பெறும் காட்சி இடம் பெற்றுள்ளது.

    மேடையின் பக்கவாட்டில் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் மண்டபத்துக்குள் அங்கவஸ்திரத்துடன் பிரதமர் மோடி நடந்து வருவது போன்ற பிரமாண்டமான கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிராவில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி 2.50 மணிக்கு சென்னை வருகிறார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 3.20 மணிக்கு கல்பாக்கம் அணுமின் நிலையம் செல்கிறார்.

    அங்கு அரசு நிகழ்ச்சியை முடித்து விட்டு மாலை 4.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.

    விமான நிலையத்தில் இருந்து காரில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு மாலை 5 மணிக்கு வருகிறார்.

    5.15 மணி முதல் 6.15 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பின்னர் காரில் விமான நிலையம் திரும்பும் பிரதமர் மோடி விமானத்தில் தெலுங்கானா மாநிலத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்துக்காக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் குவிகிறார்கள்.

    கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் மைதானத்தில் திரண்டுள்ளார்கள்.

    விமான நிலையத்தில் இருந்து நந்தனம் வரை 10 கிலோ மீட்டர் தூரம் மோடி காரில் பயணிப்பதால் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×