search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தே.மு.தி.க.-வை வளைத்துப்போட தீவிரம் காட்டும் பா.ஜ.க. - அ.தி.மு.க.!
    X

    தே.மு.தி.க.-வை வளைத்துப்போட தீவிரம் காட்டும் பா.ஜ.க. - அ.தி.மு.க.!

    • விஜயகாந்த் தனக்கு சிறந்த நண்பர் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி சிறந்த தேசியவாதியை நாம் இழந்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.
    • தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அக்கட்சி தலைவர்களும் மறைமுக வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு கூட்டணியும் களம் கண்டு வந்தன.

    பாரதிய ஜனதாவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு அ.தி.மு.க. வெளியேறியதை தொடர்ந்து தமிழகத்தில் கூட்டணி மாற்றங்கள் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. பாரதிய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் 2 கட்சிகளும் தனித்தனியாக பிரிந்து விட்ட நிலையில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி சேரப் போகிறது? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மரணம் அடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார். இதன் பின்னர் தொடர்ச்சியாக அவரைப் பற்றிய பதிவுகளையும் வெளியிட்டு உள்ளார்.

    சினிமாவிலும், அரசியலிலும் உண்மையான கேப்டன் விஜயகாந்த் என்று குறிப்பிட்டுள்ள மோடி திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழாவிலும் விஜயகாந்தை புகழ்ந்து தள்ளினார்.

    விஜயகாந்த் தனக்கு சிறந்த நண்பர் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி சிறந்த தேசியவாதியை நாம் இழந்துள்ளோம் என்றும் தெரிவித்தார். விஜயகாந்த் பற்றிய மோடியின் இந்த புகழாரங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளன.

    தே.மு.தி.க.வினரும் விஜயகாந்த் பற்றிய மோடியின் பதிவுகளை பரப்பி வருகிறார்கள். இதனால் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் தே.மு.தி.க. கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக பாரதிய ஜனதா தலைவர்களும், தே.மு.தி.க.வை பாரதிய ஜனதா கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறார்கள். இதற்கான வேலைகளிலும் அவர்கள் திரை மறைவில் ஈடுபட்டுள்ளனர்.




    இதற்கிடையே தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அக்கட்சி தலைவர்களும் மறைமுக வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது 2வது பெரிய கட்சிகள் ஏதும் இல்லாத நிலையில் தே.மு.தி.க. கூட்டணியில் சேர்ந்துக் கொண்டால் அது நிச்சயம் கூட்டணிக்கு பலமாக அமையும் என்றே அ.தி.மு.க.வினர் நம்புகிறார்கள்.

    விஜயகாந்த் இல்லாத நிலையில் வெற்றி பெறும் அளவுக்கு பலம் வாய்ந்த கட்சியுடனேயே கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே தே.மு.தி.க. நிர்வாகிகளின் விருப்பமாக உள்ளது என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா திட்டமிட்டுள்ளார். தேர்தல் நேரத்திலேயே கூட்டணியை இறுதி செய்யவும் அவர் முடிவு செய்து உள்ளார்.

    Next Story
    ×