என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    O Panneer Selvam
    X

    தமிழ்நாட்டை போதைப் பொருட்களின் புகலிடமாக தி.மு.க. அரசு மாற்றி விட்டது- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

    • கஞ்சா விற்பனை, போதைப் பொருட்கள் நடமாட்டம், கொலை, கொள்ளை போன்றவற்றில்தான் தி.மு.க. அரசு முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது.
    • தமிழ்நாடு இன்று போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் நடமாடும் இடங்கள், வனப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் போதைப் பொருள் நடமாட்டம் தலைவிரித்து ஆடுகிறது.

    இந்த நிலையில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மையமாக வைத்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவது குறித்த தகவல் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்ததன் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 5,970 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப் பொருள் மற்றும் ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்படுள்ளது.

    போதைப் பொருட்களை ஊக்குவிக்கும் அரசாக தி.மு.க. உள்ளதன் காரணமாக தமிழ்நாடு போதைப் பொருட்களின் புகலிடமாக மாறியுள்ளது.

    கஞ்சா விற்பனை, போதைப் பொருட்கள் நடமாட்டம், கொலை, கொள்ளை போன்றவற்றில்தான் தி.மு.க. அரசு முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது. இதன்மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போதைப் பொருட்கள் கடத்தும் மையமாக செயல்பட்டு வருகிறது என்பது தெளிவாகியுள்ளது.

    கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், மருத்துவத்திலும், தொழில் வளர்ச்சியிலும் முதன்மை மாநிலமாக விளங்கியிருந்த தமிழ்நாடு இன்று போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

    ஒவ்வொரு மாநிலத்திலும் உளவுத்துறை என்று உண்டு. அந்தத் துறை, கொலை, கொள்ளைக் குற்றங்களில் ஈடுபடுவோர், சமூக விரோதிகள், கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் போன்றவர்களை கண்டறிந்து, அந்தத் தகவல்களை அரசுக்கும், காவல் துறைக்கும் அளிக்கும். கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், உளவுத்துறை சுதந்திரமாக செயல்படாததன் காரணமாக, கொலைகள், கொள்ளைகள், போதைப் பொருள் நடமாட்டம், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்றவை அதிகரித்து உள்ளன.

    இதனை சரியாக புரிந்து கொள்ளாமல், முன்விரோத கொலைகளுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது என்று சட்ட அமைச்சர் கூறியிருப்பது அவரது அறியாமையைத்தான் காட்டுகிறது. இதுபோன்று ஓர் அமைச்சர் தெரிவிப்பது சட்டம் ஒழுங்கை மேலும் சீர்குலைக்க வழிவகுக்கும்.

    முதலமைச்சர் சட்டம்-ஒழுங்கு மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அதனை முற்றிலும் ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×