search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெய்வேலியில் வன்முறை: கைதான 28 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
    X

    நெய்வேலியில் வன்முறை: கைதான 28 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

    • விளை நிலத்தில் வாய்க்கால் வெட்டுவதை கண்டித்து பா.ம.க.வினர் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஒருசில இடங்களில் பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. நேற்று இரவும் 5 பஸ்கள் மீது கற்களை வீசி கண்ணாடி உடைக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் 2-வது சுரங்கத்தின் விரிவாக்கத்திற்காக சேத்தியாததோப்பு அருகே உள்ள கற்றாழை, கரி வெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

    வளையமாதேவியில் பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியது. இதற்காக அங்கு பயிரிடப்பட்ட நெற் பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்து பணிகளை தொடங்கினார்கள்.

    இதனால் விவசாயிகள் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அழிக்கப்படுவதை கண்டித்து பா.ம.க. சார்பில் அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வன்முறை வெடித்தது.

    போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர். இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அன்புமணி ராமதாஸ் உள்பட 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 28 பேரை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விளை நிலத்தில் வாய்க்கால் வெட்டுவதை கண்டித்து பா.ம.க.வினர் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருசில இடங்களில் பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. நேற்று இரவும் 5 பஸ்கள் மீது கற்களை வீசி கண்ணாடி உடைக்கப்பட்டது. கடந்த 3 நாட்களில் மட்டும் 25 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

    பா.ம.க.வினர் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து நேற்று மாலை 6 மணி முதல் கடலூரில் இருந்து பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர். இன்று காலை முதல் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×