search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு குழு அடுத்த வாரம் அறிவிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு குழு அடுத்த வாரம் அறிவிப்பு

    • கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் உயர்மட்ட குழுவினருடன் மீண்டும் ஆலோசனை நடத்த பிரேமலதா முடிவு செய்துள்ளார்.
    • விஜயகாந்த் இல்லாத நிலையில் கட்சியை வலுவாக்க வேண்டிய கட்டாயம் பிரேமலதாவுக்கு ஏற்பட்டு உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் தே.மு.தி.க.வும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது.

    விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதாலும் பிரேமலதா பொதுச்செயலாளரான பிறகு நடைபெறும் தேர்தல் என்பதாலும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. எந்த மாதிரியான முடிவை எடுக்க போகிறது, என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வருகிற தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக பாராளுமன்றத்தில் கால் பதித்து விட வேண்டும் என்கிற எண்ணத்தில் காய் நகர்த்தி வரும் தே.மு.தி.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் அ.தி.மு.க.வுடனான கூட்டணியையே விரும்பினார்கள் அதற்கேற்பவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. இன்னும் வெளிப்படையாக பேச்சுவார்த்தையை தொடங்காத நிலையில் ரகசிய பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    தொகுதி பங்கீடு தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் தொடங்க உள்ளன.

    தே.மு.தி.க. சார்பில் தொகுதி பங்கீடு பற்றி பேச்சு நடத்துவதற்காக அடுத்த வாரம் குழு அமைக்கப்பட உள்ளது. வருகிற 21-ந்தேதி இது தொடர்பான அறிவிப்பை பிரேமலதா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் பின்னர் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் உயர்மட்ட குழுவினருடன் பிரேமலதா மீண்டும் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்துள்ளார். இந்த கூட்டத்துக்கு பிறகு அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் தே.மு.தி.க. நிர்வாகிகள் முறைப்படி பேச்சு நடத்த உள்ளனர்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது 14 தொகுதிகளை கேட்பதற்கு தே.மு.தி.க. சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மேல்-சபை எம்.பி. பதவியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் தே.மு.தி.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறும் பட்சத்தில் தே.மு.தி.க.வுக்கு 14 தொகுதிகளை ஒதுக்குவதற்கு முன் வராது என்பது அனைவரும் அறிந்ததே. அது போன்ற சூழலில் கேட்டது கிடைக்காவிட்டால் கிடைக்கும் தொகுதிகளில் போட்டியிடலாம் என்பதே தே.மு.தி.க.வினரின் விருப்பமாக உள்ளது.

    அதே நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் நிச்சயம் 7 தொகுதிகள் வரையிலாவது கேட்டுப்பெற்று விட வேண்டும் என்பதே தே.மு.தி.க.வினரின் எண்ணமாகவும் உள்ளது.

    இந்த தேர்தலை பொறுத்தவரையில் தே.மு.தி.க.வுக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும்.



    விஜயகாந்த் இல்லாத நிலையில் கட்சியை வலுவாக்க வேண்டிய கட்டாயம் பிரேமலதாவுக்கு ஏற்பட்டு உள்ளது. அதற்கேற்ப தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின் போது 14 தொகுதிகள் என்கிற முடிவை மாற்றிக் கொள்ளவும் தே.மு.தி.க. திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கோபத்தில் தே.மு.தி.க. வெளியேறியது. இந்த முறை அது போன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதும் கட்சியின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×