search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    20 பெண்களை மயக்கிய காதல் மன்னன்: 2 கம்ப்யூட்டர், 3 செல்போன்களில் சாட்டிங் செய்து வலை விரித்தது அம்பலம்
    X

    20 பெண்களை மயக்கிய காதல் மன்னன்: 2 கம்ப்யூட்டர், 3 செல்போன்களில் சாட்டிங் செய்து வலை விரித்தது அம்பலம்

    • புதுச்சேரி முத்தியால்பேட்டை கோவை நகரை சேர்ந்த முகமது ஷாபான், ரகமதுல்லா என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளார்.
    • ஆன்லைன் மூலமாக அப்பாவி பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து நகைகளை பறிக்கும் செயலை நீண்ட நாட்களாகவே முகமது ஷாபான் செய்து வந்துள்ளார்.

    சென்னை:

    கணவரை பிரிந்து வாழும் பெண்கள், விவாகரத்தான பெண்கள் ஆகியோரை குறிவைத்து ஆன்லைனில் அவர்களோடு பழகி ஏமாற்றி காதல் மன்னனாக வலம் வந்த முகமது ஷாபான் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னையை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். 2-வது திருமணத்துக்காக வரன் தேடிக் கொண்டிருக்கும் அவருடன் முகமது ஷாபான் என்ற வாலிபர் ஆன்லைன் மூலமாக அறிமுகமானார். புதுச்சேரியை சேர்ந்த இவர் தன்னை மிகப்பெரிய பணக்காரர் போல காட்டிக்கொண்டு பழகியுள்ளார்.

    முகமது ஷாபானுக்கு 36 வயது என்பதை அறிந்ததும் அந்த பெண் தன்னைவிட வயதில் சிறியவரை திருமணம் செய்வதா? என்று நினைத்து விலக முயற்சித்துள்ளார். இருப்பினும் கணவரை பிரிந்த பெண்களையோ அல்லது விவாகரத்தான பெண்களையோ தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது எனது லட்சியமாகும் என்று கூறி ஏமாற்றிய முகமது ஷாபான் கொஞ்சம் கொஞ்சமாக 415 பவுன் நகைகளை சுருட்டியுள்ளார்.

    அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத் ள்ளனர்.

    முகமது ஷாபான் 20-க்கும் மேற்பட்ட பெண்களை இதுபோன்று மோசடியாக ஏமாற்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஷாபான் பெண்களை ஏமாற்றுவதை தனி கலைபோல கற்று வைத்திருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட பரபரப்பான தகவல்கள் வருமாறு:-

    புதுச்சேரி முத்தியால்பேட்டை கோவை நகரை சேர்ந்த முகமது ஷாபான், ரகமதுல்லா என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளார். அவர் ஆன்லைன் மூலமாக அப்பாவி பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து நகைகளை பறிக்கும் செயலை நீண்ட நாட்களாகவே செய்து வந்துள்ளார்.

    இதற்காக ஒரு கம்ப்யூட்டர், லேப்டாப், 3 செல்போன்கள் ஆகியவற்றை முகமது ஷாபான் பயன்படுத்தியுள்ளார். 5 சிம்கார்டுகளை போட்டு செல்போனில் பேசுவது, சாட்டிங் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு இளம்பெண்களை குறிவைத்து ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

    ஆன்லைன் மூலமாக பழகிய சென்னை பெண் வைத்துள்ள நகைகள் மீது செய்வினை வைக்கப்பட்டுள்ளது. அப்படியே அதனை வீட்டில் வைத்திருந்தால் ஆபத்து என்று அச்சுறுத்தியுள்ளார். இந்த நகைகளை மசூதியில் வைத்து பூஜை செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

    இதை நம்பி சென்னை பெண் தனது நகைகளை எடுத்து வந்து கொடுத்துள்ளார். இப்படியே 415 பவுன் நகைகளை சுருட்டிய முகமது ஷாபான் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதால் போலீசில் சிக்கியுள்ளார். இதுபோன்ற மேலும் பல பெண்களை முகமது ஷாபான் ஏமாற்றி இருப்பதால் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இது தவிர நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

    போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் நிஷா, உதவி கமிஷனர் ஜான் விக்டர் மற்றும் இன்ஸ்பெக்டர் மேனகா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரன் ஆகியோர் இந்த வழக்கில் துப்பு துலக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×